செய்திகள்

கந்து வட்டி கொடுமை: மனைவி-மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற மெக்கானிக்

Published On 2019-03-20 13:03 GMT   |   Update On 2019-03-20 13:03 GMT
கந்து வட்டி கொடுமை காரணமாக கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மெக்கானிக் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 42). இவரது மனைவி பீனாமோள் (38).இவர்களுக்கு சகாய சப்னாமேரி (14), ஜெசிதா மேரி(9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மெக்கானிக்கான அந்தோணிராஜ் தற்போது கரூர் பெரிய வடுகப்பட்டியில் இரு சக்கரம் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இதற்காக அங்குள்ள வாடகை வீட்டில் மனைவி, மகள்களுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் அவர், அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.45ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக மாதந்தோறும் 10 சதவீதம் வட்டி கட்டி வந்தார். இதனிடையே கடன் கொடுத்த நபர், தனக்கு கூடுதலாக வட்டி தர வேண்டும் என்று அந்தோணிராஜிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அந்தோணிராஜ் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களை எடுத்து சென்றதோடு, அசலுடன் கூடுதல் வட்டி தர வேண்டும் என்று மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையடைந்த அந்தோணிராஜ் இன்று காலை தனது மனைவி பீனாமோள், மகள்கள் சகாயசப்னா மேரி, ஜெசிதா மேரி ஆகியோருடன் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கையில் மண்எண்ணை கேனை கொண்டு வந்திருந்தார். பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நடைபெறுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இருப்பினும் போலீஸ் கண்ணில் படாமல் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அங்கு சென்றதும் திடீரென அந்தோணிராஜ் , தனது மனைவி, மகள்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, உடனடியாக விரைந்து சென்று தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் தங்களிடம் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தும் விவகாரத்தை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கந்து வட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி ஒருவர் மனைவி, குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு கலெக்டர் அலுவலகங்களில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சிலர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மெக்கானிக் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News