செய்திகள்
புதுக்கோட்டையில் அரசு கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு - புதுக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் போராட்டம்

Published On 2019-03-15 06:51 GMT   |   Update On 2019-03-15 06:51 GMT
பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் போராட்டம் ஈடுபட்டனர். #PollachiAbuseCase
புதுக்கோட்டை:

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமை மற்றும் சித்ரவதை சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். மேலும் மாணவர் அமைப்பை சேர்ந்த ஒரு சிலர் இந்த போராட்டத்தை தூண்டி விட்டதாக கூறி போலீசார் அந்த மாணவர் அமைப்பு பிரதிநிதிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. மேலும் கல்லூரிக்குள் இருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் கோ‌ஷங்கள் எழுப்பியவாறு வெளியில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

ஆனால் அவர்களை வெளியே விட கல்லூரி ஆசிரியர்கள் மறுத்ததோடு கல்லூரி கதவையும் பூட்டினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவிகள் கலைந்து செல்லாமல் கல்லூரிக்குள்ளேயே நின்றபடி கோ‌ஷங்களை எழுப்பியவாறு பூட்டப்பட்ட அந்த கல்லூரி கதவை திறந்தனர். பின்னர் மாணவிகள் வெளியே வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தை தூண்டியதாக மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் போலீஸ் வாகனத்தை சிறை பிடித்ததோடு நான்கு புறமும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் அரைமணி நேரம் நீடித்தது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கைது செய்யப்பட்ட 3 மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் தங்களுக்கு கிடைத்த வெற்றி என மாணவிகள் கோ‌ஷமிட்டபடி போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்குள் சென்றனர். ஆனாலும் மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #PollachiAbuseCase



Tags:    

Similar News