செய்திகள்

அ.தி.மு.க.வுக்கு தினகரன் உரிமை கோருவது ஏன்?- திவாகரன் கேள்வி

Published On 2018-12-25 04:24 GMT   |   Update On 2018-12-25 04:24 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கிய பிறகு அ.தி.மு.க.வுக்கு தினகரன் உரிமை கோருவது ஏன்? என்று திவாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். #Dhivakaran #TTVDhinakaran
மன்னார்குடி:

அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை விட அ.ம.மு.க. வலுவாக இல்லை. அ.ம.மு.க.வில் இருப்பவர்கள் பலர் எங்களுடைய உறவினர்கள்தான். தமிழகத்தின் மேற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்களில் அ.ம.மு.க.விற்கு தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. ஒரே பகுதியில் இருந்து கூட்டத்தை அழைத்துக்கொண்டு நாடக செட்டு போல கூட்டங்களை நடத்துகிறார்கள். அவர்களது கூட்டங்களில், உள்ளூர் பிரமுகர்கள் இருக்க மாட்டார்கள். அப்படித்தான் மேலூரிலும் முதல் கூட்டம் போடப்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து வருகிற சேதாரங்கள் மட்டுமே அ.ம.மு.க. மற்றும் எங்கள் கட்சிக்கு வருகின்றனர். அங்குள்ள உள்ளூர் அரசியல் பிரச்சனை காரணமாக இந்த சேதாரங்கள் உள்ளன. இதனை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் உற்று நோக்க வேண்டும்.


மேலும் தினகரனின் அரசியல் என்பது நயவஞ்சகத்தனமானது. அ.ம.மு.க.வை தொடங்கிய பின்னர் அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரும் வழக்குகளை ஏன் நடத்த வேண்டும்?

சசிகலாவும், தினகரனும் அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் எப்படி பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர் பதவி வகிக்க முடியும்?

தினகரனை நம்பி செந்தில் பாலாஜி பல கோடி ரூபாயை அ.ம.மு.க.வுக்கு செலவு செய்துள்ளார். அவரே கட்சி மாறி விட்ட நிலையில் மற்ற எம்.எல்.ஏக்களும் நம்பிக்கையிழந்துள்ளனர். அ.தி.மு.க எல்லோரும் சேர்ந்து வளர்த்த கட்சி. அதனை பாதுகாக்க வேண்டுமானால் அனைவரும் பேராசையை கைவிட்டு சில தியாகங்களை செய்ய முன்வர வேண்டும்.

அதன் மூலம் கட்சியையும், தொண்டர்களையும் வலுப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக இருந்தாலும் கட்சியை ஒருங்கிணைக்க தூய்மையான எண்ணத்தோடு செயல்பட வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வினரது செயல்பாடுகள் செயற்கையாகத் தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #TTVDhinakaran
Tags:    

Similar News