செய்திகள்

அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - மதுரை ஐகோர்ட்டில் தகவல்

Published On 2018-12-07 09:54 GMT   |   Update On 2018-12-07 09:54 GMT
வருகிற 17-ந்தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைப்பதாக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. #Doctorsstrike
மதுரை:

மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமதுயூனிஸ் ராஜா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கடந்த 4-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நோயாளிகளுக்கு ஆபரேசன் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் ஏழை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு டாக்டர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.



இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு நபர் கமி‌ஷன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கஜா புயல் நிவாரண பணிகளில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார். அந்த பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் டாக்டர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றித்தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் கடந்த 15 நாட்களாக கஜா புயல் நிவாரண பணிகள் நடக்கிறது. அதற்கு முன்பே ஏன் டாக்டர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

அரசு டாக்டர்கள் சங்க வக்கீல் வாதாடுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தையும், பதவி உயர்வை மட்டுமே செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அதுகுறித்து நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன் பின்னர் வருகிற 17-ந்தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைப்பதாக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. #Doctorsstrike


Tags:    

Similar News