செய்திகள்

கஜா புயலால் பாதித்த மக்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்- அரசிடம் புகார் தெரிவிக்க கமல் முடிவு

Published On 2018-12-01 13:27 GMT   |   Update On 2018-12-01 13:27 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களை இதுவரை சந்திக்காத அதிகாரிகள் குறித்து அரசிடம் புகார் தெரிவிக்க போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார். #KamalHassan #GajaCyclone
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அக்கச்சிப்பட்டி, பந்துவக்கோட்டை கிராமங்களில் கஜா புயலால் பாதித்த பொதுமக்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

எங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறோம். பொதுமக்களின் பாதிப்புகள் குறித்து அரசிடம் தகவல் தெரிவிப்போம். சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பொது மக்களை இதுவரை சந்திக்காமல் இருப்பது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை பாதிக்கப்பட்ட தனி ஒருவரால் ஈடு செய்ய முடியாது. அதற்கு கண்டிப்பாக பலர் உதவ வேண்டும். புயலின் போது வீடு இழந்த பொதுமக்களை, பள்ளியில் தங்கிக்கொள்ள அனுமதி அளித்த நிர்வாகிகளுக்கும், அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கிய ஆசிரியர்களுக்கும் நன்றி.

வகுப்புகளில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறினை ஏற்படுத்தி கூடாதென்பதற்காகத்தான் பள்ளி வளாகத்திற்குள் வராமல், வெளியே ரோட்டில் நின்று பேசி கொண்டிருக்கிறேன். எனவே பள்ளிக்குள் வராமல் இருந்ததை எவரும் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக வருகை தர இருந்த கமலுக்காக, பந்துவாக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்புறமிருந்த போர்டிக் கோவை கட்சியினர் தற்காலிக மேடையாக மாற்றியிருந்தனர்.

அந்த பகுதிக்கு வந்த கமல், பள்ளிக்குள் அரசியல்வாதிகள் நுழைந்து மாணவர்களின் படிப்புக்கு இடையூறினை ஏற்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளே செல்ல மறுத்து விட்டார். பின்னர் சாலையோரத்தில் தனது காரை நிறுத்தி அதில் ஏறி நின்று பொதுமக்களிடம் பேசினார். #KamalHassan #GajaCyclone
Tags:    

Similar News