செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவே அமைச்சர்கள் பயப்படுகின்றனர்: டிடிவி தினகரன் பேச்சு

Published On 2018-11-27 02:12 GMT   |   Update On 2018-11-27 02:12 GMT
எதிர்ப்புகள் அதிகமாகி வருவதால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவே அ.தி.மு.க. அமைச்சர்கள் பயப்படுகின்றனர் என்று கறம்பக்குடியில் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மருதன்கோன்விடுதி நால்ரோடு, அம்மானிப்பட்டு, கறம்பக்குடி, புதுப்பட்டி, சூரக்காடு, வெட்டன்விடுதி ஆகிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கறம்பக்குடி சீனிகடை முக்கம் பகுதியில் திறந்த வேனில் டி.டி.வி. தினகரன் நின்றபடி பேசியதாவது:-

கஜா புயல் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டபோது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவே அனைவரும் நம்பினோம். ஆனால், புயல் பாதிப்பிற்குள்ளாகி 10 நாட்களுக்கு மேல் ஆகியும் மின்சாரம், குடிநீர் உள்பட அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.

நிவாரண முகாம்களில் உள்ள டெல்டா பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படாததால் துன்பப்பட்டு வருகின்றனர். தார்ப்பாய் வழங்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. விளம்பர பதாகைகளை கட்டி குடியிருக்க வேண்டிய நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

புயலை வைத்து நான் அரசியல் செய்வதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு தொண்டு நிறுவனம்போல் செயல்பட்டு நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எதிர்ப்புகள் அதிகமாகி வருவதால் மக்களை சந்திக்கவே அ.தி.மு.க. அமைச்சர்கள் பயன்படுகின்றனர். அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை மக்கள் விரட்டி அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தானே புயலின்போது மறைந்த ஜெயலலிதா அரசு செயல்பட்டதைபோல, தற்போதைய புயலின்போது அரசு செயல்படவில்லை. இதனால் மக்கள் வெறுப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #GajaCyclone
Tags:    

Similar News