வழக்கறிஞரை தாக்கி பொய் வழக்கு பதிவு- போலீஸ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
- ராஜலட்சுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் சாதியை சொல்லி திட்டியதாகவும் என் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த தொண்டி வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் உயர் நீதிமன்றம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2020 பிப்ரவரி மாதம் தொண்டியில் போலி டாக்டர் ராஜலட்சுமியை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அப்போதைய தொண்டி டி.எஸ்.பி. புகழேந்திகணேசுக்கு எதிராக நான் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன்.
இதனால் கோபம் அடைந்த டி.எஸ்.பி. என்னை பழிவாங்கும் நோக்கோடு. போலி டாக்டருக்கு உதவியதாக அந்த வழக்கில் என்னையும் சேர்த்தனர். இந்த வழக்கில் என்னை கடுமையாக தாக்கி சட்ட விரோத காவலில் வைத்தா்.
இதனால் காவல் நிலையத்தில் நான் வாக்குவாதம் செய்தேன். அப்போது காவல் நிலைய ஆய்வாளர்கள் மேலும் உன் மீது வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினார்கள். பிறகு என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்து, மனித உரிமை கமிஷனில் புகார் செய்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட போலீசார் என் வீட்டுக்கு வந்து, என்னை தாக்கி, போலீசார் தங்கும் அறைக்கு இழுத்து சென்று அடைத்து தாக்கியதில் எனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் ராஜலட்சுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் சாதியை சொல்லி திட்டியதாகவும் என் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த 2 வழக்கும் பொய் வழக்கு. இதனை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். இரண்டையும் விசாரணை செய்து உயர் நீதிமன்றம் என் மீதான வழக்கை ரத்து செய்தது.
எனவே பொய்யான வழக்கு பதிந்து சட்டவிரோத காவலில் வைத்தும் வழக்கறிஞர் சமூகத்திலும் எனது சமூகத்திலும் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்திய டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா ராணி, திருவாடானை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், ஜோதி முருகன், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் என் மீது பொய் புகார் கொடுத்த முருகேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திருவாடானை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். ஆனால் எனது மனு நிராகரிக்கப்பட்டது.
எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி முகமது சபீக் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து தற்போதைய செங்கல்பட்டு உட்கொட்ட டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்துள்ளார்.