செய்திகள்

மழை எச்சரிக்கை: தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2018-10-06 04:01 GMT   |   Update On 2018-10-06 04:01 GMT
மழை எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #TNRain #KeralaRain

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் ராமநாதபுரம், திருவாடானை, தொண்டி, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாய பணிகள் தீவிர மடைந்துள்ளன.

நேற்று மாலையில் மாவட்டத்தில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

ராமேசுவரம் பகுதியில் இன்று மழை இல்லை. ஆனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ரெட் அலர்ட் மற்றும் காற்று காரணமாக சாலைகள் மணலால் மூடப்பட்டு உள்ளதாலும் தனுஷ்கோடிக்கு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் முகுந்தராயர் சத்திரம் வரை அனுமதிக்கப்பட்டனர். தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை இல்லை. சில இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்தது. இன்று காலை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, காளையார் கோவில், கல்லல், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மழை இல்லை.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. நகரில் மழை இல்லை. இன்று காலை மதுரை, மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், வாடிப்பட்டி சோழவந்தான் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. #TNRain #KeralaRain

Tags:    

Similar News