செய்திகள்

வேப்பூர் அருகே கார்- லாரி மோதல்- 3 பேர் உடல்நசுங்கி பலி

Published On 2018-08-26 12:28 GMT   |   Update On 2018-08-26 12:28 GMT
வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேப்பூர்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் அப்பு(வயது 92). இவரது மகன் கண்ணன்(66). கண்ணனின் மனைவி ஜெயஸ்ரீ(56). இவர்களது மகள் காமாட்சி(19). இவர்கள் குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி தஞ்சாவூரில் இருந்து திருத்தணிக்கு ஒரு காரில் சென்றனர். திருத்தணி கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் அங்கிருந்து தஞ்சாவூருக்கு காரில் புறப்பட்டனர். காரை திருவையாறை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் (40) ஓட்டி வந்தார்.

கார் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அரியநாச்சி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவர் சுப்பிரமணியனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அப்பு, கண்ணன், ஜெயஸ்ரீ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

கார் டிரைவர் சுப்பிரமணியன், கண்ணனின் மகள் காமாட்சி ஆகிய 2 பேரும் காரின் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காமாட்சியையும், கண்ணனையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய 3 பேர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News