வழிபாடு

அற்புத வாழ்வு தரும் ஆருத்ரா தரிசனம்

Published On 2026-01-02 10:19 IST   |   Update On 2026-01-02 10:19:00 IST
  • அக்னி வடிவமான சிவபெருமானை குளிர்ச்சி மிகுந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆறு விதமான அபிஷேகம் செய்து குளிர்விக்கிறார்கள்.
  • சிவன் கோவில்களுக்கு சென்று, அங்குள்ள நடராஜரையும், சிவகாமி அம்மையாரையும் தரிசிக்க வேண்டும்.

பல சிறப்புகளை உடைய மார்கழி, இறை வழிபாட்டுக்கு மிகவும் உதந்த மாதமாகும். பொதுவாக, மார்கழி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்குரிய மாதமாக கருதுவார்கள். ஆனால் பெருமாளுக்கு மட்டுமின்றி சிவபெருமானுக்கும் உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது. மார்கழி மாதத்தில் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதை போல, சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது.

27 நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டும்தான் 'திரு' என்ற சிறப்பு அடைமொழி வழங்கப்பட்டுள்ளன. ஒன்று திருமாலுக்கு உகந்த 'திருவோணம்' நட்சத்திரம். மற்றொன்று சிவபெருமானுக்கு உகந்த 'திருவாதிரை' நட்சத்திரம். இந்த சிறப்புமிக்க திருவாதிரை நாளில் தான் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

அக்னி வடிவமான சிவபெருமானை குளிர்ச்சி மிகுந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆறு விதமான அபிஷேகம் செய்து குளிர்விக்கிறார்கள். இந்த அபிஷேகத்தை கண் குளிர காண்பதே 'ஆருத்ரா தரிசனம்' ஆகும். இதனை 'மார்கழி திருவாதிரை' என்றும் சொல்வார்கள்.

ஒரு சமயம் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ''ஆஹா! அற்புதமான காட்சி'' என்று மனமுருகி சத்தம் போட்டார். இதைக் கேட்ட ஆதிசேஷனும், மகாலட்சுமி தாயாரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். கண் விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், ''தங்களின் பரவச நிலைக்கு காரணம் என்ன'' என்று ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர்.

அதற்கு, சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன் என்றார் மகாவிஷ்ணு. மேலும், அவர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்ல, ஆதிசேஷனுக்கும் சிவனின் ஆனந்தத் தாண்டவத்தை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆதிசேஷனின் மன ஓட்டத்தை புரிந்துகொண்ட மகாவிஷ்ணு, ''ஆதிசேஷா! உன் மனம் நினைப்பதை நான் அறிவேன். நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டுமானால், பூலோகத்தில் பிறந்து தவம் இயற்ற வேண்டும். அப்போது உனக்கும் அந்த அற்புத ஆனந்தத் தாண்டவ தரிசனம் கிடைக்கும்'' என்றார்.

அதன்படி ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவரது உடல் இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பல காலம் பூமியில் தவம் இருந்தார். அதன் பயனாக, ஒருநாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் சிவபெருமான் தன்னுடைய ஆனந்தத் தாண்டவ திருக்காட்சியை பதஞ்சலி முனிவருக்குக் காட்டி அருளினார். அந்த தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும். சிவபெருமானின் அற்புத நடன காட்சியை கண்ட பதஞ்சலி முனிவர், ''இறைவா, இந்த திருக்காட்சியை பூலோக மக்களுக்கும் காட்டி அருள வேண்டும்'' என வேண்டினார். அதன்படியே மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது.

திருவாதிரை நோன்பு

தேவர்களின் அதிகாலைப் பொழுதாக கருதப்படும் மார்கழி மாதத்தை 'பிரம்ம முகூர்த்த நேரம்' என்றும் சொல்வார்கள். இந்த மாதத்தில் வரும் பவுர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில்தான் 'திருவாதிரை நோன்பு' கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, சிவ நாமத்தை உச்சரித்து உடலில் திருநீறு பூச வேண்டும். காலையில் உணவு அருந்துவதை தவிர்க்கவும்.

அருகில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று, அங்குள்ள நடராஜரையும், சிவகாமி அம்மையாரையும் தரிசிக்க வேண்டும். ஆலயத்தில் நடைபெறும் தாண்டவ தீபாராதனையை கண்டு வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் சிவபெருமானுக்குரிய பாடல்கள், சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்கள் போன்றவற்றை பாராயணம் செய்து வேண்டி கொள்ளுங்கள். பின்பு இரவில் எளிமையான உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த திருவாதிரை நோன்பை, மாதந்தோறும் வரும் திருவாதிரை நட்சத்திர நாளிலும் மேற்கொள்ளலாம். தொடர்ச்சியாக ஒரு வருடம் திருவாதிரை நோன்பு இருப்பவர்களுக்கு இனிமையான வாழ்க்கை அமையும், கயிலாயத்தில் வாழும் பேறும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் நல்ல கணவன் அமைவர், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், பாவங்கள் நீங்கும், அறிவு, ஆற்றல் பெருகும். மேலும் எண்ணற்ற பலன்களை பெறலாம்.

Tags:    

Similar News