செய்திகள்

அனைத்து கட்சிகளும் இணைந்து பா.ஜனதாவை வீழ்த்துவோம்- வசந்தகுமார்

Published On 2018-07-03 17:03 IST   |   Update On 2018-07-03 17:03:00 IST
பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் இணைந்து பாரதிய ஜனதாவை வீழ்த்துவோம் என்று வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
திருப்பூர்:

காங்கிரஸ் கட்சியின் மாநில வர்த்தக பிரிவு சார்பில் திருப்பூர் குளத்துபுதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாநில பொது செயலாளர் ராயல் தர்மதுரை தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாநில தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அனைத்து கட்சிகளும் இணைந்து மக்களுக்கு எதிராக இருந்து வரும் பா.ஜனதா கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைப்போம். காவிரி பிரச்சனையில் தமிழக மக்களுக்கு ஆதரவாகவே காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரு மாநில முதல்-அமைச்சர்களும் அமர்ந்து கலந்தாலோசனை செய்து தேவையான தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யால் தமிழகம் வேதனையையே அனுபவிக்கிறது.

கோவை, திருப்பூர், அம்பத்தூர், ராணிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றுவதாக இருந்தால் யாரும் எதிர்க்கமாட்டார்கள். தேவையற்ற திட்டங்களை மட்டுமே மக்கள் எதிர்க்கின்றனர்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதத்தை கொடுத்துவிட்டு பின்னர் பணிகளை தொடங்கட்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜாமுருகன், நிர்வாகிகள் முருகன், மெட்டல் மாதவன், பிரகாஷ், நடராஜ், குணசேகரன், கருப்பசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
Tags:    

Similar News