தமிழ்நாடு செய்திகள்

தர்மபுரி அருகே லாரி மோதி விபத்து - 4 பேர் பலி

Published On 2025-12-16 11:27 IST   |   Update On 2025-12-16 14:07:00 IST
  • லாரி முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
  • தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சதீஸ், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தருமபுரி:

கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் புதூர் பகுதியில் இன்று காலை வந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரில் இருந்தவர்கள் அய்யா.. அம்மா... என்று அலறினர்.

உடனே அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுமக்கள் உதவியுடன் போலீசார் காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் இறந்தது ஈரோடு மாவட்டம், சங்கரியை சேர்ந்த முனியப்பன் (வயது40), தருமபுரி மாவட்டம், மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி, சம்மனம்பட்டியை சேர்ந்த அருணகிரி ஆகிய 3 பேர் என தெரிய வந்தது. அவர்களது உடல் களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சதீஸ், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்து நடந்த இடத்தை ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த விபத்தால் தருமபுரி-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனால் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News