கௌரி கிஷனைத் தொடர்ந்து கிச்சா சுதீப்... இணையத்தில் குவியும் பாராட்டுகள்
- இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது.
- இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் தமிழில் 'நான் ஈ', 'அருந்ததி', 'புலி' ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'மேக்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்த விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் 'மார்க்' திரைப்படத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ளார். இது இவரின் 47வது திரைப்படமாகும். இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குநர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் நடிகை நோக்கி கடுமையான கேள்விகளை கேட்டார். அதற்கு தகுந்த பதிலடி கொடுத்ததற்காக கிச்சா சுதீப்பை இணையதள வாசிகள் பாராட்டி வருகின்றனர்.
'வணங்கான்' படத்தில் உள்ள அருமையான வசனங்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இந்தப் படத்தில் உங்களிடம் அவ்வளவு வசனங்கள் உள்ளதா?
ஏனென்றால் நடிகைகளை இங்கே ஓரமாக உட்கார வைத்திருக்கிறார்கள். படத்திலும் அப்படித்தான் இருக்குமா?' என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். அதற்கு உடனே கிச்சா சுதீப், 'எங்கள் படப்பிடிப்பு தளத்தில் இதுபோன்ற மோசமான கேள்விகள் எதுவும் வரலை. அதனால தான் நல்லா வந்துருக்கு என்று கூறிய சுதீப் உடனடியாக அந்த நடிகைகளை அழைத்து, மேடையின் நடுவில் உட்கார வைத்து பேசச்சொன்னார். இப்படி யாருடைய மைண்டிலும் வரலை. இது போன்ற உங்கள் கேள்விகள் மற்றவர்களை சங்கடப்படுத்தும் என்று சுதீப் கூறினார்.
முன்னதாக, '96' பட நடிகை கௌரி கிஷனின் 'அதர்ஸ்' பட செய்தியாளர்கள் சந்திப்பில், உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கௌரி கிஷன் துணிச்சலாக பதில் அளித்து இருந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த யூடியூபர் கௌரி கிஷனிடம் மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.