நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியா காந்திக்கு எதிரான ED புகாரை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
- 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது.
- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சோனியா ராகுல் உள்ளிட்டோர் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
அண்மையில் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் ராகுல் காந்தி, சோனியா மற்றும் 6 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது.
இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறையின் புகாரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
எப்.ஐ.ஆர் (FIR)பதிவு செய்யாமல் ஈ.சி.ஐ.ஆர் (ECIR) பதிவு செய்து அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கைத் தொடங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.