null
2025 REWIND: அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சரக்கு ரெயில் தீ விபத்து
- திருவள்ளூர் நகரம் முழுதும் கரும்புகை சூழ்ந்ததால், நகரவாசிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.
- சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை துறைமுகத்திலிருந்து டீசல் ஏற்றிக்கொண்டு வாலாஜா ரோடு நோக்கிச் சென்ற சரக்கு ரெயில் கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரெயில் தீப்பிடித்ததும் லோகோ பைலட் உடனடியாக அவசரகால பிரேக்குகளை பயன்படுத்தி ரெயிலை நிறுத்தினார். தொடர்ந்து திருவள்ளூர் ரெயில் நிலைய மாஸ்டர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (OHE) மின்சார விநியோகத்தை அணைத்தார்.
சென்னை, அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ரசாயன கலவையுடன் கூடிய நுரையை தெளித்து, தீயை அணைக்கும் பணி நடந்தது. 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ரெயில்வே நிர்வாகத்தினர் அப்பகுதிவாசிகள் உதவியுடன் 26 டேங்கர் பெட்டிகளை திருவள்ளூர் மார்க்கத்திலும், ஒரு டேங்கர் மற்றும் இரண்டு என்ஜின் உள்பட நான்கு பெட்டிகளை அரக்கோணம் மார்க்கத்திலும் மீட்டனர். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பெட்டிகளில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணமாக அருகில் உள்ள வீடுகளில் இருந்து சமையல் சிலிண்டர்கள் அகற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த பகுதியில் சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் திசை திருப்பப்பட்டன.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், தி.நகர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஏறத்தாழ, 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதில், 18 டேங்கர்கள் முற்றிலும் எரிந்து விட்டன. அதிலிருந்த பல ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் எரிந்து நாசமானது. மீதமிருந்த, 32 டேங்கர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. சுமார் 12.60 லட்சம் லிட்டர் 12 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் எரிந்து நாசமானது. தடம் புரண்ட பெட்டிகளை அகற்றி, தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றன.
இந்த தீவிபத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. மொத்தத்தில், இது ஒரு பெரிய விபத்தாக இருந்தாலும், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாலும், ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாலும் பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
இச்சம்பவத்தால், திருவள்ளூர் ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மறுநாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருவள்ளூர் கலெக்டர் எம்.பிரதாப் கூறுகையில்,
சென்னை துறைமுகத்தில் இருந்து வாலாஜா சாலை சைடிங்கிற்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தடம் புரண்டது. இதனால் தீ விபத்து ஏற்பட்டது.
ரெயிலின் கிட்டத்தட்ட 15 வேகன்கள் முற்றிலுமாக எரிந்துவிட்டது. இருப்பினும், பாதிக்கப்படாத இரண்டு வேகன்களில் இருந்து டீசல் மீட்கப்பட்டது. 700க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் இரவு முழுவதும் விரைவாகவும் விடாமுயற்சியுடனும் பணியாற்றி மூன்றாவது மற்றும் நான்காவது தண்டவாளங்களை சரிசெய்ததாக அவர் கூறினார்.