செய்திகள்

தொடரும் பாசப்போராட்டம்: ஆசிரியை பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்கள்

Published On 2018-06-28 23:19 GMT   |   Update On 2018-06-28 23:19 GMT
வேலூர் மாவட்ட அரசு பள்ளியில் ஆசிரியை பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோரும் பள்ளியை முற்றுகையிட்டனர்.
வேலூர்:

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் பகவான் வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றதை தாங்கிகொள்ள முடியாத மாணவ - மாணவிகள் அவரை வேறுபள்ளிக்கு செல்லவிடாமல் பாசப்போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் ஆசிரியை மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ - மாணவிகள் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த தமிழாசிரியை விஜயா அங்கிருந்து குடியாத்தம் அருகே உள்ள பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

ஆசிரியையின் பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி நேற்று காலை மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8.30 மணிக்கு வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் பெற்றோருடன் பள்ளி முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு சென்று மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவ - மாணவிகள் கூறுகையில், ‘இந்த பள்ளியில் தமிழாசிரியை விஜயா கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். எங்கள் அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகுவார். நாங்கள் அதிக மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்துள்ளார். தற்போது அவர் எங்கள் பள்ளியை விட்டு சென்றது எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே தமிழாசிரியை விஜயா மீண்டும் எங்கள் பள்ளிக்கு வரவேண்டும்’ என்றனர்.

கோரிக்கையை கடிதமாக எழுதி கொடுக்குமாறும், அதை முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். 
Tags:    

Similar News