செய்திகள்
கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசிய காட்சி

இன்னும் 2 மாதத்தில் அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும்- டி.டி.வி.தினகரன் ஆரூடம்

Published On 2018-06-25 12:29 IST   |   Update On 2018-06-25 12:29:00 IST
அ.தி.மு.க.கட்சி துரோகிகள் கையில் உள்ளதாகவும் இன்னும் இரண்டு மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #AMMK
ஈரோடு:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் நடந்த இணைப்பு விழாவில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது.-

இன்று நடைபெறும் கூட்டத்திற்கு முதலில் காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. அதனால் உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி தான் இந்த கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

நான் ஈரோட்டுக்கு வரும் முன் ஈரோட்டை சேர்ந்த ஒரு போலீஸ் உயர் அதிகாரி என்னிடம் வந்து நீங்கள் சிறிது நேரம் கழித்து ஈரோடுசெல்லுங்கள் என்றார். அதற்கு நான் ஏன் சிறது நேரம் கழித்து செல்ல வேண்டும் என்றேன். அதற்கு அந்த போலீஸ் அதிகாரி முதல்வர் சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார். எனவே நீங்கள் தாமதமாக செல்ல வேண்டும் என்றார்.

அதை மீறி நாங்கள் வந்த போது எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் தங்கள் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்திருந்தனர். யார் இவ்வாறு செய்வார்கள்?. ரவுடிகள் தான் ரோட்டில் செல்லும் வாகனங்களை தடுப்பார்கள். காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். இந்த ஆட்சி இன்னும் இரண்டு மாதத்தில் கவிழ்ந்து விடும். அனைவரும் வீட்டுக்கு போய் விடுவார்கள்.

ஆர்.கே.நகரில் எனக்காக பிரச்சாரம் செய்தவர் இந்த எடப்பாடி பழனிசாமி. அவர் என்னை பார்த்து கேட்கிறார். யார் இந்த தினகரன்? என்று.

2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு அளிக்க வந்த போது என் வீட்டில் இருந்தவர் தான் இந்த எடப்பாடி. என்னை கட்சியில் உறுப்பினர் இல்லை என்கிறார். அப்படி என்றால். ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்காக ஏன் பிரச்சாரம் செய்தார்?.

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற வீட்டிற்கு ரூ.6ஆயிரம் வீதம் ரூ.150 கோடி வரை பணம் கொடுத்தனர். 32 அமைச்சர்களும் தெரு தெருவாக சுற்றினார்கள். ஆளும் கட்சி என்ற அதிகாரமும் அவர்களிடம் இருந்தது. ஆனால் நான் தான் வெற்றி பெற்றேன்.

அதில் எனக்கு வருத்தம் என்ன வென்றால். நானே இரட்டைஇலை சின்னத்தை தோற்கடித்து விட்டேனே என்று தான். ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. தற்போது அ.தி.மு.க.கட்சி துரோகிகள் கையில் உள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக வந்தாலும், வராவிட்டாலும் இந்த ஆட்சி கவிழ்வது உறுதி. எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரவில்லை என்றால். 18 பேரும் மீண்டும் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். அப்போது இந்த ஆட்சி கவிழ்வது உறுதி. இதை காவல்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தினகரன் பேசினார். #TTVDinakaran #AMMK
Tags:    

Similar News