செய்திகள்

தங்க தமிழ்ச்செல்வனை சேர்த்துக்கொள்ள தயார், ஆனால் அமைச்சர் பதவி தர முடியாது - முதல்வர் பழனிசாமி

Published On 2018-06-18 13:10 IST   |   Update On 2018-06-18 13:10:00 IST
அதிமுகவில் தங்க தமிழ்செல்வனை சேர்த்துக்கொள்ள நாங்கள் தயார், ஆனால் அமைச்சர் பதவி தர முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #edappadipalanisamy #MLAsDisqualified
திருச்சி:

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக்  கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்மேலாண்மை, குடிமராமத்து பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை, காவிரி ஒழுங்காற்றும் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் மற்றும் தமிழகத்துக்கான நிலுவை தொகை ரூ.1800 கோடியை தர வேண்டும் உள்பட தமிழகத்திற்கான பல்வேறு அக்கூட்டத்தில் முன்வைத்தார்.

இதற்கிடையே, அதிமுக சார்பில் நடைபெறும் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று மயிலாடுதுறை செல்கிறார். கைத்தறித்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கிருந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்தால் பாரட்டுக்குரியது. தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தால் அவர் சேர்த்துக்கொள்ளப்படுவார். ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி அளிப்பது எப்படி சாத்தியமாகும் ? எனவே, தங்க தமிழ்செல்வனுக்கு அமைச்சர் பதவி தர முடியாது.

மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தினால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை’

இவ்வாறு அவர் தெரிவித்தார். #edappadipalanisamy #MLAsDisqualified
Tags:    

Similar News