செய்திகள்

கிரண்பேடி அழைத்த விழாவுக்கு தன்மானமுள்ளவர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள்- நாராயணசாமி

Published On 2018-05-27 18:54 IST   |   Update On 2018-05-27 18:54:00 IST
இரண்டு ஆண்டு நிறைவு விழாவை கவர்னர் கிரண்பேடி நாளை கொண்டாடுகிறார். இதில் தன்மான முள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி:


புதுவை கவர்னராக கிரண்பேடி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி பதவி ஏற்றார். கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்று வருகிற 29-ந்தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 2 ஆண்டு நிறைவு விழாவை கவர்னர் கிரண்பேடி நாளை (திங்கட்கிழமை) கொண்டாடுகிறார்.

கவர்னர் மாளிகையில் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இந்த தகவலை நேற்று மாலை மத்திய பாரதீயஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிமிடம் கூட புதுவையில் பணிபுரியமாட்டேன் என கிரண்பேடி கூறிஇருந்தார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கவர்னர் கிரண்பேடி சொன்ன சொல்லை காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். அவரால் 2 ஆண்டுகள் புதுவையில் எந்த வளர்ச்சியும் இல்லை. என்னை தவிர அனைவருக்கும் விழாவுக்கு வரும்படி கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். தன்மானமுள்ளவர்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதுவை கவர்னர் கிரண்பேடி- முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. மோதல் அவ்வப்போது உச்சகட்டத்தை எட்டுவதும், பின்னர் சமாதானமாகி விடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களான நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், ஆகியோர்கள் கவர்னரிடம் சமரச போக்கையே கடைபிடித்து வருகிறார்கள். இதனால் விழாவில் பங்கேற்க அமைச்ர்களுக்கு மட்டும் கவர்னர் கிரண்பேடி அழைப்பிதழ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

கவர்னர் விழாவில் தன்மான முள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ள நிலையில் நாளைய விழாவில் அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

Similar News