செய்திகள்

வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து

Published On 2018-05-15 06:36 GMT   |   Update On 2018-05-15 06:36 GMT
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி:

தென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை பெய்யுமென்றும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளில் இருந்து தினமும் அதிகாலையில் ஏராளமான மீனவர்கள் கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். ஆனால் இன்று காலை இவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

கடலுக்கு புறப்பட்ட சிலரும் அலைகளின் ஆக்ரோ‌ஷம், கடல் சீற்றம் காரணமாக கரைக்கு திரும்பினர். மேலும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

கன்னியாகுமரியில் நேற்றிலிருந்தே கடல் சீற்றம் காணப்பட்டது. அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்தன. இன்று காலையிலும் அலைகள் ஆக்ரோ‌ஷமாக மிரட்டின. இதனால் காலையில் சூரியோதயம் காணச் சென்ற சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா போலீசார் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர்.



கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. கோவளத்தில் தூண்டில் வளைவு சேதமானது.
Tags:    

Similar News