செய்திகள்

பல்லாவரம் மேம்பால பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது: 40 பயணிகள் தப்பினர்

Published On 2017-08-07 16:01 IST   |   Update On 2017-08-07 16:01:00 IST
பல்லாவரம் மேம்பால பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தாம்பரம்:

கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னை கோயம்பேடுக்கு இன்று அதிகாலை அரசு விரைவு பஸ் வந்தது. டிரைவர் அண்ணாமலை பஸ்சை ஓட்டினார். சுமார் 40 பயணிகள் இருந்தனர்.

அதிகாலை 2 மணியளவில் பல்லாவரம்-மீனம்பாக்கம் இடையே பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் புதிதாக கட்டப்படும் பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென பாய்ந்து கவிழ்ந்தது.

இதில் பயணிகள் அனைவரும் லேசான காயத்துடன் தப்பினர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறியடித்து பஸ்சில் இருந்து இறங்கி வெளியே வந்தனர்.

பஸ் கவிழ்ந்த இடம் குறுகலான பாதை என்பதால் பின்னால் வந்த வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்லாவரம் முதல் கிண்டி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதற்கிடையே அதிகாலையில் வெளியூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்களும் இதில் சிக்கியது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.

காலை 9 மணியளவில் ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது. இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

Similar News