விளையாட்டு

முன்னணி வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்

Published On 2026-01-13 07:21 IST   |   Update On 2026-01-13 07:21:00 IST
  • மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
  • இந்த தொடர் இன்று தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.

புதுடெல்லி:

மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஷி யூ கி (சீனா), குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), ஒலிம்பிக் சாம்பியனான அன் சே யங் (தென்கொரியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்), வாங் ஜி யி (சீனா), பி.வி.சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் லக்ஷயா சென், சக நாட்டவரான ஆயுஷ் ஷெட்டியை சந்திக்கிறார். மற்ற இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த், சீன தைபேயின் லின் சுன் யியையும், பிரனாய், சீனாவின் லீ சுக் யூயையும் எதிர்கொள்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனும், கடந்த வாரம் நடந்த மலேசிய ஓபனில் அரைஇறுதி வரை முன்னேறியவருமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, வியட்நாமின் நுயென் துய் லின்னுடன் தனது மோதலை தொடங்குகிறார். மற்றொரு இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத், சீன தைபேயின் பாய் யூ போவை சந்திக்கிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்பவர்கள் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, அமெரிக்காவின் சென் ஜி யி-பிரெஸ்லி சுமித் ஜோடியுடன் தனது சவாலை தொடங்குகிறது.

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் கூட்டணி, தாய்லாந்தின் ஒர்னிச்சா சோங்சதாபோர்ன்பார்ன்- சுகிதா சுவாச் இணையோடு பலப்பரீட்சை நடத்துகிறது. பிரியா- ஸ்ருதி மிஸ்ரா, கவிபிரியா- சிம்ரன் சிங் (பெண்கள் இரட்டையர்), துருவ் கபிலா- தனிஷா கிரஸ்டா (கலப்பு இரட்டையர்) உள்ளிட்ட இந்தியர்களும் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள்.

Tags:    

Similar News