100 சதங்களை அடையப்போகிறாரா கோலி? சாத்தியக்கூறுகள் என்ன?
- விராட் கோலி தற்போது 84 சர்வதேச சதங்களுடன் உள்ளார்.
- இந்தியா அடுத்த 2027 உலகக் கோப்பை வரை சுமார் 30-35 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி. இவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அவர் 2008-ல் அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடினார். 3 வடிவத்திலும் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் 84 சதங்களுடன் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். (டெஸ்டில் 30, ஒருநாள் போட்டிகளில் 53, டி20யில் 1).
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 53 சதங்கள் அடித்து, சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இலக்கை துரத்திச் சென்று அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர். சேஸிங்கின் போது மட்டும் 26 சதங்களுக்கு மேல் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 27,000க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி தற்போது 84 சர்வதேச சதங்களுடன் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 16 சதங்கள் தேவை. அவர் இந்த மைல்கல்லை எட்டுவது சாத்தியமா என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
37 வயதிலும் அவர் மிக உயர்ந்த உடல் தகுதியுடன் உள்ளார். இது இன்னும் சில ஆண்டுகள் அவர் விளையாட உதவும். அவர் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். சமீபத்திய ஒருநாள் தொடர்களில் அவர் தொடர்ந்து சதங்கள் அடித்து வருகிறார்.
இருந்தாலும் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், அவர் விளையாடும் ஒரே வடிவம் ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே. இந்தியா அடுத்த 2027 உலகக் கோப்பை வரை சுமார் 30-35 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது.
அவர் 16 சதங்களை எட்ட, கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் ஒரு சதம் அடிக்க வேண்டும். 2027 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோலி 2027 உலகக் கோப்பையில் 11 போட்டிகள் வரை விளையாட முடியும். ஒருவேளை இந்தியா சீக்கிரமே வெளியேறினால் குறைந்தபட்சம் 6 போட்டிகள் விளையாடும்.
புள்ளிவிவர ரீதியாகப் பார்த்தால் இது மிகவும் கடினமான இலக்காகத் தெரிகிறது. ஆனால், கோலியின் திறமை, அனுபவம் மற்றும் தீவிரமான ஆட்ட வேட்கையைக் கருத்தில் கொள்ளும்போது, கிரிக்கெட்டில் எதையும் சாத்தியமற்றது என்று சொல்லிவிட முடியாது.
விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 1000க்கும் அதிகமான பவுண்டரிகளை (1027 ஃபோர்ஸ்) அடித்துள்ளார். அவரது டெஸ்ட் சராசரி ஒரு கட்டத்தில் 55.10 என்ற உச்சத்தை எட்டியது. குறிப்பாக இந்தியாவில் நடந்த போட்டிகளில் இவரது சராசரி 55.58 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.