ரோகித் சர்மாவிடம் கற்றுக் கொண்ட வித்தை தற்போது வேலை செய்கிறது - சூர்யகுமார்
- ரோகித் சர்மாவை ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், மூத்த சகோதரராகவும் வழிகாட்டியாகவும் பார்க்கிறேன்.
- இக்கட்டான சூழலிலும் ரோகித் காட்டும் நிதானம் தனக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்தது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ரோகித் சர்மா பாணியில் கேப்டன்ஷிப் செய்வதாக வெளிப்படையாக கூறினார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
ரோகித் சர்மாவை ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், மூத்த சகோதரராகவும் வழிகாட்டியாகவும் பார்க்கிறேன். களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், தான் முதலில் உதவிக்காக அழைப்பது ரோகித் சர்மாவைத்தான்.
இக்கட்டான சூழலிலும் ரோகித் காட்டும் நிதானம் எனக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்தது. வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி, ரோகித்தின் குணாதிசயங்களில் எந்த மாற்றமும் இருக்காது.
நான் அவருடன் நிறைய கிரிக்கெட் விளையாடினேன். அவர் எப்படி வேலை செய்தார் என்பது எனக்குத் தெரியும். ரோகித் தனது வீரர்களை எவ்வாறு அணுகுவாரோ அதே பாதையை நானும் பின்பற்றுகிறேன். அதில் சில மாற்றங்களைச் செய்து கேப்டன்சியை மேற்கொள்கிறேன்.
என சூர்யகுமார் கூறினார்.
சமீபத்தில் 2026 டி20 உலகக் கோப்பை தொடர்பான செய்திகளிலும், தான் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்று கூட ரோகித் பாயிடம்தான் ஆலோசனை கேட்பேன் என்று சூர்யா நகைச்சுவையாகவும் அதே சமயம் மரியாதையுடனும் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.