367 நாட் அவுட்... லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடிக்க விரும்பாதது ஏன்? - மனம் திறந்த முல்டர்
- 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முல்டர் டிக்ளேர் செய்தது பெரும் பேசுபொருளானது.
- முல்டர் இன்னும் 34 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடித்திருக்கலாம்.
தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான 2ஆவது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 626 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே முச்சதம் விளாசி அசத்தினார் முல்டர். 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முல்டர் டிக்ளேர் செய்தது பெரும் பேசுபொருளானது.
முல்டர் இன்னும் 34 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் 400 ரன்கள் என்ற வரலாற்று சாதனையை முறியடித்திருக்கலாம். அவர்தான் கேப்டன். இதனால் டிக்ளேர் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் இருந்த போதிலும், அவர் டிக்ளேர் செய்தார்.
2 ஆம் நாள் ஆட்ட முடிவிற்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன், "பிரையன் லாரா ஒரு லெஜண்ட், அந்த அந்தஸ்துள்ள ஒருவர் அந்த சாதனையை தக்கவைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்
எனக்கு மீண்டும் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் இப்போது செய்ததை தான் அப்போதும் செய்வேன். நான் டிக்ளேர் செய்வது குறித்து பயிற்சியாளரிடமும் பேசினேன். சில சாதனைகள் லெஜண்டுகளுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட லெஜண்டுகளில் ஒருவர் லாரா" என்று தெரிவித்தார்.
லாரா 2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் அடித்தது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்து வருகிறது.
மேத்யூ ஹைடன் 2003-ல் 380 ரன்களும், லாரா 1994-ல் 375 ரன்களும், ஜெயவர்த்தனே 2006-ல் 374 ரன்களும், கேரி சோபர்ஸ் 1958-ல் ஆட்டமிழக்காமல் 365 ரன்களும் அடித்துள்ளனர்.