கிரிக்கெட் (Cricket)

மெல்போர்னில் சதமடித்த நிதிஷ் ரெட்டி: பரிசுத்தொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்

Published On 2024-12-29 02:05 IST   |   Update On 2024-12-29 02:05:00 IST
  • பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் நிதிஷ் ரெட்டி சதமடித்தார்.
  • நிதிஷ் குமார் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமராவதி:

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

பாக்சிங் டே என பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் அடித்தார்.

இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்னுடனும், சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.

முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்த இந்திய அணியை இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர்-நிதிஷ் ரெட்டி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தியது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

நிதிஷ் ரெட்டிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இது முதலாவது சதமாகும். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்த வயதில் டெஸ்ட் சதமடித்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ் ரெட்டி படைத்தார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இந்நிலையில், முக்கியமான தருணத்தில் மெல்போர்னில் சதமடித்து அசத்திய நிதிஷ் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நிதிஷ் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News