மார்க்ரம் அதிரடி சதம்: 2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி
- இந்திய தரப்பில் ருதுராஜ், விராட் கோலி சதம் அடித்தனர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்க்ரம் சதம் அடித்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் 105 ரன்னும் விராட் கோலி 102 ரன்னும் கே.எல்.ராகுல் 66 ரன்னும் அடித்தனர்.
இதையடுத்து 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
தொடக்க ஆட்டக்காரரான மார்க்ரம் 98 பந்துகளில் 110 ரன்கள் விளாசி அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பவுமா 46 ரன்னிலும் அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நிதானமாக விளையாடிய ப்ரீட்ஸ்கி 68 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய போஸ் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.
49.2ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.