கிரிக்கெட் (Cricket)

அணியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை: ஓய்வு குறித்து 7 ஆண்டுக்கு பிறகு மவுனம் கலைத்த யுவராஜ்

Published On 2026-01-30 08:06 IST   |   Update On 2026-01-30 08:06:00 IST
  • எனது விளையாட்டை என்னால் ரசிக்க முடியவில்லை.
  • மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக நெருக்கடியை உணர்ந்தேன்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆல்-ரவுண்டராக வலம் வந்த யுவராஜ்சிங், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த உலகக் கோப்பையின் தொடர்நாயகனாக (362 ரன் மற்றும் 15 விக்கெட்) ஜொலித்தார். அதன் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடினார்.

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி அணியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார்.

இந்த நிலையில் தனது ஓய்வுக்கான காரணத்தை 7 ஆண்டுக்கு பிறகு யுவராஜ்சிங் வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் யூடியூப் சேனலில் கலந்துரையாடிய போது யுவராஜ்சிங் பேசுகையில், 'எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி பகுதியில் அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை.

எனது விளையாட்டை என்னால் ரசிக்க முடியவில்லை. தேவையான ஆதரவும், மரியாதையும் இல்லாத போது ஏன் தொடர்ந்து விளையாட வேண்டும்? யாருக்காக, எதை நிரூபிப்பதற்காக விளையாட வேண்டும்? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இதைவிட மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக நெருக்கடியை உணர்ந்தேன். கிரிக்கெட் தான் எனது வாழ்வின் முக்கியமானதாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அதுவே சுமையானது. கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த பின்னரே, அந்த சுமை விலகி பழைய நிலைக்கு திரும்பினேன் ' என்றார்.

Tags:    

Similar News