இயேசுவுக்கு நன்றி... மத ரீதியிலான விமர்சனங்கள் குறித்து மனம்திறந்து பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
- ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டினர்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
ஜெமிமா விவகாரத்தில் கடந்த ஆண்டு அவரது தந்தையையொட்டி நடந்த மதமாற்ற சர்ச்சையும் சேர்ந்துகொண்டது.
அதாவது, கடந்தாண்டு டிசம்பர் மாதம் மும்பையில் உள்ள ஜிம்கானா கிளப்பின் உறுப்பினரில் இருந்து ஜெமிமா நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு கிளப்பின் வளாகத்திற்குள் அவரது தந்தை ரோட்ரிக்ஸ் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்தி மத மாற்றம் செய்ய ஊக்குவித்ததாக சிலர் புகார் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த மதமாற்ற குற்றச்சாட்டுகளை அப்போதே கிளப்பின் தலைவர் மறுத்திருந்தார்.
அதேபோல், ஜெமிமாவின் தந்தையும் கிளப் வளாகத்திற்குள் கூட்டங்கள் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் கிளப்பின் விதிகளுக்கு உட்பட்டே நடத்தியதாக விளக்கம் அளித்தார்.
அந்த சமயத்தில் ஜெமிமாவின் கிறிஸ்தவ மத நம்பிக்கை குறித்து எதிர்மறையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர் மீது மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது குடும்பம் மீது வைக்கப்பட்ட மத ரீதியிலான விமர்சனங்கள் குறித்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுதொடர்பாக இந்தியா டுடேவுக்கு பிரத்யேக பேட்டியளித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், "உண்மையைச் சொல்லப் போனால், அது எப்போது நடந்தது என்பது எனக்கு நினைவில் இருக்கிறது. .நாங்கள் செய்யாத ஒரு விஷயத்திற்காக என் பெற்றோர் அதில் இழுக்கப்பட்டபோது எனக்கு அது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த நேரத்தில், நாங்கள் விதிமுறைகளின்படிதான் செயல்பட்டோம். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன. ஆனால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களை மிகவும் பாதித்தன. ஏனெனில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.