எனது இதயத்துடிப்பு அதிகமானது- பரபரப்பான ஆட்டம் குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து
- இறுதிப் போட்டிக்கு நுழைந்தது நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.
- சொந்த மண்ணில் இந்திய அணியை வழிநடத்தி இறுதிப்போட்டிக்கு கொண்டு செல்வது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
மும்பை:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன் குவித்தது.
254 ரன் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து கடும் சவால் கொடுத்து கடைசி வரை போராடியது.அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்தது. இதனால் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.
வெற்றி குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
இறுதிப் போட்டிக்கு நுழைந்தது நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. சொந்த மண்ணில் இந்திய அணியை வழிநடத்தி இறுதிப்போட்டிக்கு கொண்டு செல்வது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
சஞ்சு சாம்சனின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. பேட்டிங்கில் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும். இது மாதிரியான அதிரடியை தான் தொடக்க வீரர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
டாஸ் போடும் போது இங்கிலாந்து கேப்டன் ஹாரி புருக்கிடம் உங்கள் அணிக்கு எதிராக நாங்கள் எவ்வளவு ஸ்கோர் இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டேன்.ஏனென்றால் அவர்கள் எப்போதுமே இலக்கை எடுக்கக் கூடியவர்கள்.
ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள சிறப்பாக செயல்பட்டு போட்டியை தங்கள் பக்கம் கொண்டு வந்ததை நம்ப முடியவில்லை. பும்ரா எவ்வளவு திறமையானவர் என்பது உங்களுக்கு தெரியும். அவரது பந்துவீச்சு முக்கியத்துவம் பெற்று இருந்தது.
பீல்டிங்கில் வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். இதற்கு பீல்டிங் பயிற்சியாளர் திலீப்புக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். வீரர்களின் பங்களிப்பு கூடுதலாக இருந்தது.
பேட்டிங் வரிசையில் முதல் 3 வீரர்கள் மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும். அதன் பிறகு பேட்டிங் வரிசை சூழலுக்கு ஏற்ப மாறும். ஆதில் ரஷீத் பந்து வீச வரும்போது ஷிவம் துபே தான் அதனை எதிர் கொள்ள சரியான நபர் என்று நாங்கள் நினைத்தோம்.
இந்த ஆட்டத்தில் நான் மிகவும் பதற்றத்துடன் இருந்தேன். என்னுடைய இதயத்துடிப்பு அதிகமானது.நிச்சயம் 160 முதல் 175-க்கு சென்று இருக்கும்.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே மைதானத்தில் 80 சதவீதம் ரசிகர்கள் நிரம்பி இருந்தனர்.ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.
இந்திய மண்ணில் சாம்பியன் பட்டத்துக்காக நாங்கள் இறுதிப் போட்டிக்கு செல்கிறோம். நிச்சயம் கடுமையான அழுத்தம் இருக்கும். ஆனால் இறுதிப் போட்டியில் விளையாட எங்களுடைய வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி வருகிற 8-ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.