நான் சொல்ற மாதிரி பந்து வீசு.. விக்கெட் விழுதா இல்லையானு பாரு.. பும்ராவின் அட்வைஸ் உதவியது.. சிராஜ்
- ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள்.
- அப்போது விக்கெட் விழவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள்.
இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டுமே குவித்திருந்தாலும், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது.
அணியின் கேப்டனாக செயல்பட்ட பும்ரா ஐந்து விக்கெட்டுகள் எடுத்த நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்கு பின்னர் 2-வது இன்னிங்சில் சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள் என்று இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா அறிவுரை வழங்கியதாக சிராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் எப்போதும் பும்ரா பாய் உடன் பேசிக்கொண்டே இருப்பேன். முதல் போட்டிக்கு முன்பே நான் என்னுடைய அனுபவத்தை கூறினேன். அப்போது அவர் என்னிடம் விக்கெட்டுக்காக ஓட வேண்டாம். ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள்.
அப்போது விக்கெட் விழவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள். அதற்குப் பிறகு நான் நன்றாக பந்து வீசினேன் விக்கெட்டுகளையும் வீழ்த்தினேன். ஆஸ்திரேலியா எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். ஏனென்றால் இந்த ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகம் என ஒரு வேகப்பந்து வீச்சாளர் விரும்பும் அனைத்தையும் ரசிக்கலாம். எனவே உங்கள் பந்துவீச்சை ரசிப்பதற்கு உங்களுக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை கிடைக்கும்.
என்று கூறினார்.