null
2027 உலக கோப்பையில் விராட் விளையாடுவாரா? அவரது சிறுவயது பயிற்சியாளரின் பதில் வைரல்
- 2027-ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி ஆவலாக உள்ளார்.
- கோலி விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 3 சதம், 2 அரைசதம் விளாசியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி. இவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
3 வடிவத்திலும் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் 84 சதங்களுடன் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். (டெஸ்டில் 30, ஒருநாள் போட்டிகளில் 53, டி20யில் 1).
இவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 2027-ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி ஆவலாக உள்ளார்.
37 வயதிலும் அவர் மிக உயர்ந்த உடல் தகுதியுடன் உள்ளார். இது இன்னும் சில ஆண்டுகள் அவர் விளையாட உதவும். அவர் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். சமீபத்திய ஒருநாள் தொடர்களில் அவர் தொடர்ந்து சதங்கள் அடித்து வருகிறார்.
மேலும் விஜய் ஹசாரே தொடரிலும் அவர் சதம் அடித்து அசத்தி உள்ளார். இதன் மூலம் விராட் கோலி விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 3 சதம், 2 அரை சதம் விளாசியுள்ளார்.
இந்நிலையில் 2027 உலகக் கோப்பைக்கு விராட் கோலி முழுமையாகத் தயாராக உள்ளார் என அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட், இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்ற விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. வேறு யாரும் அவரைப் போல இந்தியாவுக்காக இவ்வளவு போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை என்று நினைக்கிறேன். அவர் என் மாணவர் என்பதில் எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இதை விட பெரிய பெருமை என்ன இருக்க முடியும்.
விராட் கோலி அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார், ஆனால் இன்னும் விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டார். அவர் இந்திய அணியில் மிகவும் நிலையான வீரர் மற்றும் 2027 உலகக் கோப்பைக்கு முழுமையாக தயாராக உள்ளார்.
என ராஜ்குமார் சர்மா கூறினார்.