கிரிக்கெட் (Cricket)

மோசமான ஆட்டம்: வீரர்களுக்கு அபராதம் விதித்த பாக். கிரிக்கெட் வாரியம்

Published On 2026-03-02 16:34 IST   |   Update On 2026-03-02 16:34:00 IST
  • வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
  • இந்தியாவிடம் தோல்வி அடைந்தது தான் நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியது. நடப்பு டி20 தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்்றுக்கு முன்னேறாதது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தம் மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அந்நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த நிலைமை சற்று மாறத் தொடங்கிய நிலையில், டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, உலகக் கோப்பை தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக சூப்பர் 8 சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்கு இந்திய மதிப்பில் 16 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், க்ரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியா அணியிடம் தோல்வி அடைந்தது தான் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் க்ரூப் மற்றும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நிறைவு பெற்று, நான்கு அணிகள் அரையிறுதி சுற்றில் வருகிற மார்ச் 4 மற்றும் மார்ச் 5-ஆம் தேதிகளில் மோதுகின்றன. முதல் அரையிறுதி சுற்று போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், மார்ச் 5-ஆம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து வருகிற மார்ச் 8-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News