சஞ்சு சாம்சன் ஒன் மேன் ஷோ: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா..!
- சஞ்சு சாம்சன் 97 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஷிவம் துபே 19-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டினார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடி வருகிறது.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 11 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷ் 6 பந்தில் 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் 41 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்ளை இழந்தது.
3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 10-வது ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 26 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். 10 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது.
சூர்யகுமார் யாதவ் 16 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 10.2 ஓவரில் 99 ரன்கள் எடுத்திருந்தது, 4-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இவர் 13-வது ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிகள் விரட்டி அசத்தினார்.
இந்தியா 14 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. கடைசி 6 ஓவரில் 60 ரன்கள் தேவைப்பட்டது. 15-வது ஓவரின் 4-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 27 ரன்கள் அடித்தார்.
அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். 15-வது ஓவரின் கடைசி பந்தில் சஞ்சு சாம்சன் பவுண்டரி அடித்தார். 16-வது ஓவரை ஷமர் ஜோஷப் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 14 ரன்கள் கிடைத்தன. இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி 4 ஓவரில் இந்தியாவுக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரை ஷெப்பர்டு வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா கொடுத்த கேட்சை ஹோல்டர் தவறவிட்டார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் இந்தியாவுக்கு 11 ரன்கள் கிடைத்தன.
கடைசி 3 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டன. 18-வது ஓவரை ஹோல்டர் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கிடைத்தன.
இதனால் கடைசி 2 ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை ஷோசப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். பாண்ட்யா 14 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். அடுத்து ஷிவம் துபே களம் இறங்கினார். இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 10 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்டன. ஷிவம் துபே முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஓவரின் 5-வது பந்தையும் துபே பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் 2 ரன்கள் கிடைத்தன. இந்த ஓவரில் 10 ரன்கள் கடைக்க கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டன.
கடைசி ஓவரை ஷெப்பர்டு வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார் சஞ்சு சாம்சன். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 50 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். துபே 8 ரன்கள் எடுத்திருந்தார்.