டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள் - சுனில் நரைன் புதிய சாதனை
- ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் நரைன் விளையாடியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார்.
கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் விளையாடியுள்ள நரைன் 210 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பு நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக இங்கிலாந்தின் சமித் படேல் 208 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
டி20 கிரிக்கெட்டில்ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்
1. சுனில் நரைன் - 210* (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
2. சமித் படேல் - 208 (நாட்டிங்ஹாம்ஷையர்)
3. கிறிஸ் உட் - 199 (ஹாம்ப்ஷயர்)
4. லசித் மலிங்கா - 196 (மும்பை இந்தியன்ஸ்)
5. டேவிட் பெய்ன் - 193 (க்ளௌசெஸ்டர்ஷையர்)