விரைவில் மீண்டு வருவோம்: பாட் கம்மின்ஸ் பேட்டி
- முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- அந்த அணியின் அனிகேத் வர்மா அதிரடியாக ஆடி 74 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிரடியாக ஆடிய அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார்.
டெல்லி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டு பிளெஸ்சிஸ் 50 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருது மிட்செல் ஸ்டார்க்குக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் மோசமான ஷாட்டுகளை அடிக்கவில்லை. ரன் அவுட்டும் அப்படியே அமைந்தது. இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்.
அனிகேத் எங்களுக்கு நல்ல ஸ்கோர் கொடுத்தார். அனிகேத் அதிகம் அறியப்படாதவர் என்றாலும் இத்தொடரில் அபாரமாக வந்துள்ளார். அவர் எங்களுக்கு வெற்றி பெற பாதி வாய்ப்பைக் கொடுத்தார்.
மொத்தமாக எங்கள் வீரர்கள் அனைவரும் தங்களால் என்ன முடியும் என்பதில் கொஞ்சத்தை காண்பித்தனர். எனவே நாங்கள் எதையும் அதிகம் மாற்ற வேண்டியதில்லை.
கடந்த போட்டியை போல் இது மோசமான பெரிய தோல்வி என நினைக்கவில்லை. கடந்த இரண்டு ஆட்டங்களில் எல்லாம் நம் வழியில் செல்லவில்லை. மிக விரைவில் நாங்கள் மீண்டும் முன்னேறுவோம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.