ஐ.பி.எல்.(IPL)

ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியில் பஞ்சாப் வெற்றி: பிளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை

Published On 2025-04-30 23:29 IST   |   Update On 2025-04-30 23:29:00 IST
  • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • அதன்படி, முதலில் ஆடிய சி.எஸ்.கே. 190 ரன்களைக் குவித்தது.

சென்னை:

ஐ.பி.எல். தொடரின் 49-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளேயில் மீண்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஷேக் ரஷித் 11 ரன்னும், ஆயுஷ் மாத்ரே 7 ரன்னும், ஜடேஜா 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

4வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன் - பிரேவிஸ் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. 78 ரன்கள் சேர்த்த நிலையில் பிரேவிஸ் 32 ரன்னில் அவுட்டானார்.

சாம் கர்ரன் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 47 பந்தில் 88 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைக்கவில்லை.

இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பஞ்சாப் அணி சார்பில் 19வது ஓவரை வீசிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங், யான்சென் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.

பிரியான்ஷ் ஆர்யா 23 ரன்னும், நேஹல் வதேரா 5 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் 6வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

Tags:    

Similar News