ஐபிஎல் 2025: ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி- ஐதராபாத்துக்கு 246 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்
- ஷ்ரேயாஸ் அய்யர் 36 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
- பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் 2025 தொடரின் 27ஆவது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தனர். அவர்களின் எண்ணம் போன்று பந்து பேட்டில் நன்றாக பட்டது.
ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பிரப்சிம்ரன் சிங். இதனால் முதல் ஓவரில் பஞ்சாப் அணிக்க 14 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். பிரப்சிம்ரன் சிங் ஒரு பவுண்டரி அடிகக் 16 ரன்கள் கிடைத்தது. 3ஆவது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஆர்யா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். பிரப்சிம்ரன் ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் இந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது. அத்துடன் பஞ்சாப் கிங்ஸ் 53 ரன்கள் சேர்த்தது.
4ஆவது ஓவர ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஆர்யா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் கிங்ஸ் 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது.
5ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். பிரப்சிம்ரன் சிங் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கிடைத்தது. 6ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் கிடைத்தன. இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.
7ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்தார். இவர் 23 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் வதேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 12.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. ஷ்ரேயாஸ் அய்யர் 22 பந்தில் அரைசதம் அடித்தார்.
13.3 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருக்கும்போது வதேரா ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷஷாங் சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 17ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் 17 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 205 ரன்கள் குவித்தது.
18ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். இந்த ஓவரில் பஞ்சாப் அணிக்கு 5 ரன்கள்தான் கிடைத்தது. 18 ஓவர் முடிவில் பஞ்சாப் 210 ரன்கள் எடுத்திருந்தது.
19ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி 4 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரில் 27 ரன்கள் கிடைத்தன.
ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.