ஐபிஎல் 2025: கடைசி 2 ஓவரில் "CAMEO" செய்த மும்பை இந்தியன்ஸ்: டெல்லிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்கு
- ரோகித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினார்.
ஐபிஎல் தொடரின் 63ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியில் அக்சர் படேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இடம் பெறவில்லை.
மும்பை அணியின் ரியான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 5 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தா்.
அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 21 ரன்னிலும், மறுமுனையில் விளையாடிய ரிக்கெல்டன் 25 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் 6.4 ஓவரில் 58 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா 27 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னில் வெளியேறினார்.
ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்கும்போது மும்பை இந்தியன்ஸ் 16.3 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் நமன் திர் ஜோடி சேர்ந்தார்.
மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்திருந்தது. 19ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் முகேஷ் குமார் 3 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 159 ரன்கள் சேர்த்தது.
கடைசி ஓவரை சமீரா வீசினார். இந்த ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 43 பந்தில் 73 ரன்களும், நமன் திர் 8 பந்தில் 24 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.