ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: குவாலிபையர் 1க்கு RCB அணி தகுதி பெறுமா? - லக்னோ அணியுடன் இன்று மோதல்

Published On 2025-05-27 07:55 IST   |   Update On 2025-05-27 07:55:00 IST
  • பெங்களூரு அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்றுள்ளது.
  • லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யவும், புள்ளி பட்டியலில் ஏற்றம் காணவும் முயற்சிக்கும்.

லக்னோ:

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இன்றுடன் லீக் சுற்று முடிவுக்கு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்ட பெங்களூரு அணிக்கு இது முக்கியமான ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பெங்களூரு 2016-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக புள்ளிபட்டியலில் டாப்-2 இடத்தை பிடிக்க முடியும். மாறாக தோற்றால் 3-வது இடத்திலேயே இருக்கும். ஐ.பி.எல். கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய சண்டையால் போட்டி தொடர் 9 நாட்கள் தடைபடுவதற்கு முன்பு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டு வீறுநடைபோட்ட பெங்களூரு அணி மீண்டும் போட்டி தொடங்கிய பிறகு உத்வேகத்தை இழந்து நிற்கிறது. அதன் பின்னர் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கடந்த ஆட்டத்தில் 42 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் பணிந்தது. 232 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் பெங்களூரு 189 ரன்னில் அடங்கியது.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (548 ரன்), பில் சால்ட், கேப்டன் ரஜத் படிதாரும், பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், நல்ல நிலையில் உள்ளனர். தோள்பட்டை காயத்தால் தாயகத்துக்கு சென்று இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் திரும்பி இருக்கிறார். 10 ஆட்டங்களில் ஆடி 18 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் அவரது வருகை நிச்சயம் பெங்களூருவுக்கு வலுசேர்க்கும்.

அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக 235 ரன்கள் குவித்த லக்னோ அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது. அந்த அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் (ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 560 ரன்), நிகோலஸ் பூரன் (511), மார்க்ரம் (445), ஆயுஷ் பதோனி (329) அசத்துகின்றனர். பந்து வீச்சில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், தற்காலிக மாற்று வீரர் வில்லியம் ஓ ரூர்கே நம்பிக்கை அளிக்கின்றனர். ஐதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி (14 விக்கெட்) மீண்டும் களம் காண்பது பந்துவீச்சை பலப்படுத்தும்.

டாப்-2 இடத்தை பிடிக்க பெங்களூரு அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யவும், புள்ளி பட்டியலில் ஏற்றம் காணவும் முயற்சிக்கும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு 3 ஆட்டத்திலும், லக்னோ 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், திக்வேஷ் ரதி, ஹிமாத் சிங், ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், வில்லியம் ஓ ரூர்கே, ஆகாஷ் சிங்.

பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, லிவிங்ஸ்டன், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News