கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய ஜெர்சியில் பாக். பெயர் - ரசிகர்கள் அதிர்ச்சி

Published On 2025-02-18 13:22 IST   |   Update On 2025-02-18 13:22:00 IST
  • முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது.
  • இந்திய அணி போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.

8 அணிகள் மோதும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஜெர்சி அணிந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புகைப்படங்களின் படி இந்திய அணி ஜெர்சியில் "சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தான்" என்று அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறாது என கூறப்பட்டது. எனினும், தற்போது பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளதை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. சீருடை சார்ந்த ஐ.சி.சி. விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதை உணர்த்தியுள்ளது.

இது குறித்து பேட்டியளித்த பி.சி.சி.ஐ. செயலாளர் தேவ்ஜித் சைகா, "சாம்பியன்ஸ் டிராபியில் சீருடை சார்ந்து ஐ.சி.சி. பிறப்பிக்கும் அனைத்து விதிகளையும் பி.சி.சி.ஐ. பின்பற்றும்," என்று தெரிவித்தார்.

ஐ.சி.சி.-யின் சீருடை விதிகளின் படி ஐ.சி.சி. நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியும் அந்த தொடரை நடத்தும் நாட்டின் பெயரை தங்களது ஜெர்சியில் இடம்பெற செய்ய வேண்டும். இது தொடர்பான போட்டிகள் தொடரை நடத்தும் நாட்டை தவிர்த்து பொதுவான இடத்தில் நடந்தாலும், இந்த விதிமுறையை பின்பற்றுவது அவசியம் ஆகும்.

முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கேப்டன்கள் போட்டோஷூட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் செல்ல மாட்டார் என்று கூறப்பட்டது. எனினும், இதர காரணங்களால் அதிகாரப்பூர்வ போட்டோஷூட் அல்லது கேப்டன்கள் போட்டோஷூட் நடத்தப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.



Tags:    

Similar News