கிரிக்கெட் (Cricket)

பிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா

Published On 2025-12-05 18:03 IST   |   Update On 2025-12-05 18:04:00 IST
  • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
  • அந்த அணியின் ஜோ ரூட் 138 ரன்னுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

பிரிஸ்பேன்:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ஜோ ரூட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 70 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ஜாக் கிராலி 76 ரன்னும், ஜோப்ரா ஆர்ச்சர் 38 ரன்னும், ஹாரி புரூக் 31 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டு வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் ஜேக் வெதரால்டு 72 ரன்னும், மார்னஸ் லபுஷேன் 65 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரூன் கிரீன் 45 ரன்னும், டிராவிஸ் ஹெட் 33 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 378 ரன்கள் குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை விட 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

Similar News