ஜூன் 20.. டிராவிட், கங்குலி, கோலி வரிசையில் அறிமுகமான சாய் சுதர்சன்
- இங்கிலாந்து இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
- இந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாகியுள்ளார்.
லீட்ஸ்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாகியுள்ளார்.
இதன்மூலம் இந்திய அணியின் ஜாம்பவான்கள் அறிமுகமாகிய ஜூன் 20-ந் தேதியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாகியுள்ளார்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி (ஜூன் 20-ந் தேதி 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார்கள்.
அதனை தொடர்ந்து விராட் கோலி ஜூன் 20-ந் தேதி 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமானார். அந்த வரிசையில் தமிழக வீரர் சாய் சுதர்சனும் இதே நாளில் அறிமுகமாகியுள்ளார். இவரும் பல சாதனைகள் படைக்க ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் முதல் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.