விளையாட்டு

காய்களை தள்ளிவிட்டு சிக்கலில் சிக்கிய கார்ல்சென்- வைரல் வீடியோ

Published On 2025-12-31 11:56 IST   |   Update On 2025-12-31 11:56:00 IST
  • 14-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மாக்னஸ் கார்ல்சென், ஹேக் மார்ட்டிரோசியனுடன் மோதினார்.
  • பதற்றத்தில் இருந்த கார்ல்சென் கட்டத்தில் இருந்த மற்ற காய்களை தள்ளிவிட்டு விட்டார்.

உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. முதலில் நடந்த ரேபிட் வடிவிலான போட்டியில் ஓபன் பிரிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

அடுத்து அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய உலக பிளிட்ஸ் போட்டி நடந்தது. இதில் ஓபன் பிரிவில் 19 சுற்றுகளும், பெண்கள் பிரிவில் 15 சுற்றுகளும் நடந்தன.

இந்த பிளிட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை கார்ல்சென் கைப்பற்றினார். உலக பிளிட்ஸ் போட்டியில் கார்ல்சென் 9-வது முறையாக பட்டத்தை வென்றார்.

முன்னதாக இந்த போட்டியின் 14-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென், அர்மேனியா கிராண்ட்மாஸ்டர் ஹேக் மார்ட்டிரோசியனுடன் மோதினார். 69-வது நகர்த்தலின் போது, 2 வினாடி மட்டுமே எஞ்சி இருந்ததால் கார்ல்சென் வேகமாக காயை நகர்த்தினார்.

அப்போது பதற்றத்தில் கட்டத்தில் இருந்த மற்ற காய்களை தள்ளிவிட்டு விட்டார். பிளிட்ஸ் விதிப்படி, நேரம் கணக்கீட்டை நிறுத்துவதற்குள் காய்களை மீண்டும் சரியான இடத்தில் வைக்க வேண்டும். டென்ஷனில் இருந்த கார்ல்செனால் அதை செய்ய முடியவில்லை.

பிறகு நடுவர் தலையிட்டு இது விதிமீறல் என்று கார்ல்செனுக்கு எடுத்துரைத்தார். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இந்த சுற்றில் மார்ட்டிரோசியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கார்ல்சென் அடுத்த 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றை எட்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News