செய்திகள்
ரோகித் சர்மா

கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு

Published On 2020-09-24 07:09 GMT   |   Update On 2020-09-24 07:09 GMT
கொல்கத்தா அணியை வீழ்த்திய மும்பை பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ரோகித்சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

அபுதாபி:

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றியை பெற்றது.

அபுதாபியில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது.

கேப்டன் ரோகித்சர்மா 54 பந்தில் 80 ரன்னும் (3 பவுண்டரி, 6 சிக்சர்), சூர்ய குமார் யாதவ் 28 பந்தில் 47 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்னும் எடுத்தனர். ஷிவம்மவி 2 விக்கெட்டும், சுனில் நரீன், ஆந்த்ரே ரசல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 49 ரன்வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

கும்மின்ஸ் அதிகபட்சமாக 12 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். போல்ட், பேட்டின்சன், பும்ரா, ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், போலார்ட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்று இருந்தது. இந்த வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

நாங்கள் திட்டமிட்டு விளையாடினோம். எங்களது திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தி இந்த வெற்றியை பெற்றோம். எங்களது ஆட்டம் இரக்கமற்றதாக இருந்தது. எங்களது பேட்டிங்கும், பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது.

வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றியை பெற்றோம். போல்ட், பேட்டின்சன் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்க ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறும்போது, ‘எங்களது பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் முன்னேற்றம் தேவை. இங்குள்ள ஆடுகள தன்மையை வீரர்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை’ என்றார்.

மும்பை அடுத்த ஆட்டத்தில் பெங்களூரையும் (28-ந்தேதி), கொல்கத்தா அடுத்த போட்டியில் ஐதராபாத்தையும் (26-ந்தேதி) சந்திக்கின்றன.

Tags:    

Similar News