செய்திகள்

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக 8 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முகமது சிராஜ்

Published On 2018-09-02 12:18 GMT   |   Update On 2018-09-02 12:18 GMT
நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக முகமது சிராஜ் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை பதித்தார். #INDA #MohammedSiraj
இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி கவாஜா, குர்ட்டிஸ் பேட்டர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பேட்டர்சன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். அதன்பின் வந்த டிராவிஸ் ஹெட் (4), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் (0), மிட்செல் மார்ஷ் (0) ஆகியோரை அடுத்தடுத்து சிராஜ் வீழ்த்தினார்.

அதன்பின் கவாஜா உடன் மார்னஸ் லபுஸ்சேக்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மார்னஸ் லபுஸ்சேக்னே அரைசதமும், உஸ்மான் கவாஜா சதமும் அடித்தனர்.


சதம் அடித்த கவாஜா

அதன்பின் இருவரையும் சிராஜ் வீழ்த்தினார். மார்னஸ் லபுஸ்சேக்னே 60 ரன்களும், கவாஜா 127 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் கடைநிலை வீரர்களை சிராஜ் வெளியேற்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ 75.3 ஓவரில் 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 8 விக்கெட் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இந்தியா ‘ஏ’ முதல் இன்னிங்சை தொடங்கியது. ரவிக்குமார் சமர்த், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்தியா ‘ஏ’ அணி 12 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ரவிக்குமார் சமர்த் 10 ரன்னுடனும், மயாங்க் அகர்வால் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News