செய்திகள்

கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ஸ்மித் - குளோபல் டி20 கனடா லீக்கில் அரைசதம் அடித்து அசத்தல்

Published On 2018-06-29 09:18 GMT   |   Update On 2018-06-29 09:18 GMT
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி விளையாட தடைவிதிக்கப்பட்டதை அடுத்து குளோபல் டி20 கனடா லீக்கில் விளையாடிய ஸ்மித் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
குளோபல் டி20 கனடா லீக் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். 6 அணிகள் மோதும் இதில் பங்கேற்கும் டொராண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால தடைபெற்ற ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற குளோபல் டி20 கனடா போட்டியில் களம் இறங்கினார். 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 61 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ஸ்மித்திற்கு ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றது. ஸ்மித்துடன் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய டேவிட் வார்னரும் இந்த லீக்கில் விளையாடி வருகிறார்.


ஸ்மித் இந்த லீக் போட்டியில் கிடைக்கும் வருமானத்தை அடிமட்டத்தில் இருந்து கிரிக்கெட்டை வளர்க்கும் திட்டத்திற்கு (grassroots cricket programs) வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய கிறிஸ் கெய்ல், 'ஸ்மித் மற்றும் வார்னர் செய்த குற்றங்களுக்கு அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்கள் மற்ற கிரிக்கெட் வீரர்களை போன்று மகிழ்ச்சியாக வாழ உரிமை உள்ளது. தங்கள் குடும்பத்திற்காக அவர்கள் உழைக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கான இடத்தை வழக்க வேண்டும். மனிதர்கள் தவறு செய்வது வழக்கம். அதனை திருத்திக் கொள்ள அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டும்' என கூறினார்.

Tags:    

Similar News