சிறப்புக் கட்டுரைகள்

இதயத்தை பாதுகாக்க எளிய வழிமுறைகள்

Published On 2025-10-17 17:15 IST   |   Update On 2025-10-17 17:16:00 IST
  • எல்லா மார்புவலியும் மாரடைப்பு வலி அல்ல.
  • இதயத்தை மிகவும் பாதிக்கக்கூடிய காரணிகளில் முதன்மையானது மனஅழுத்தம்

இதயத்தை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அறிவதற்கு ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நீங்கள்நீண்ட நாட்கள் வாழ, இதய நோயால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து விலகி இருக்க இப்பகுதி உங்களுக்கு வழிகாட்டும்.

முதலில் நம் இதயத்தின் இயல்பு பற்றிப் புரிந்து கொள்வோமா? இதயம் ஒரு முறை துடித்து விரிவடைவதற்கு 8 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. முதல் 5 நொடிகளுக்கு விரிவடைந்து தூய்மையாக்கப்பெற்ற இரத்தத்தை நுரையீரலில் இருந்து இடப்பக்க அறைகளில் பெறுகிறது. அதேநேரத்தில் கெட்ட இரத்தம் உடலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வலப்பக்க அறைகளில் பெறப்படுகிறது. அடுத்த 3 நொடிகளுக்கு இதயம் சுருங்கும்போது கெட்ட இரத்தம் தூய்மையாக்கப்படுவதற்கு நுரையீரலுக்கும், தூய இரத்தம் உடல் முழுவதற்கும் தமனிகள் வாயிலாக எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி ஓய்வில்லாமல் பிறப்பு முதல், நம் இறப்பு வரை வேலை செய்கிறது நம் இதயம்.

நிறைய நோயாளிகள் இடது தோள்பட்டை வலி வந்தாலோ இடது கை வலித்தாலோ மாரடைப்பு வந்துவிட்டதோ? என்று பயப்படுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் மார்புவலி என்பது எல்லோருக்கும் இயல்பாக ஏற்படக் கூடிய ஒன்றாகி விட்டது. மார்புவலி ஏற்படுவதற்குப் பலதரபபட்ட காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மாரடைப்பு (ஹார்ட்அட்டாக்). இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எல்லா மார்புவலியும் மாரடைப்பு வலி அல்ல. மார்பு வலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

மார்புவலி ஏற்படுவதற்கான காரணங்கள்

மன அழுத்தம், நிறைய நேரங்களில் நம்மனதில் ஏற்பட்டகாயங்கள், கவலைகள், பதற்றம் மற்றும் பிற மனநலச் சிக்கல்களால் கூட இந்த மார்புவலி ஏற்படலாம். இந்த மனஅழுத்தத்தினால் பலப்பேருக்கு இதயம் கனப்பது போன்ற உணர்வு, இதயத்தில் அழுத்தம், மார்பில் சுருக்சுருக்கென்று ஒரு கூர்மையான வலி மற்றும் இதயத்தில் தீவிரவலி போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் மார்புவலி மார்பெலும்பின் அடிப்பகுதியில் ஏற்படும். சிலசமயங்களில் நமக்கு ஏற்படும் மிகுந்த பயமே மார்பில்வலி ஏற்படக் காரணமாக அமைந்து விடுகிறது.

ஏதாவது கனமான பொருளைத் தூக்கும்போதோ, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்யும்போதோகூட மார்புவலி ஏற்படலாம். மாதவிடாய் நாட்களின் போது சில பெண்களுக்கு மார்பில் வலி ஏற்படலாம். மாதவிடாய் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் இது சரியாகிவிடும். நுரையீரல் மற்றும் நுரையீரலைச் சுற்றி உள்ள சவ்வுகளில் ஏற்படும் இடர்களினாலும் மார்பு வலி ஏற்படலாம். விலா எலும்பு மற்றும் சதைகளில் ஏற்படும் இடர்களினால் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் வலி ஏற்படுகின்றது.

உணவுக் குழாய்களில் ஏற்படும் இடர்கள் நடுமார்பில் வலி ஏற்படக் காரணமாகிறது. ஆக அனைத்துமே மார்பு வலியை ஏற்படுத்தினாலும், மாரடைப்பினால் ஏற்படும் மார்புவலி சில சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருக்கும்.

மாரடைப்பினால் ஏற்படும் வலி எவ்வாறு இருக்கும்?

மாரடைப்பு என்றால், வலி, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். மேலும் வலிநீண்ட நேரம் வரை நீடிக்கும். மார்பில் தோன்றும் வலிபடிப்படியாகத் தோள்பட்டை, முதுகு, கைகள், தாடைஎன்றுபரவ ஆரம்பித்துவிடும். வியர்த்துக்கொட்டுவது சிலருக்கு ஏற்படலாம், சிலருக்கு வாந்தி வரக்கூடும். இவை அனைத்துமே ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே உங்களுக்கு வலிகடுமையாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

மரு.அ.வேணி

 

இதயத்தைப் பாதிக்கும் காரணிகள்

இதயத்தின் இயக்கம் மாறுபடும்போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

இதயத்தை மிகவும் பாதிக்கக்கூடிய காரணிகளில் முதன்மையானது மனஅழுத்தம் (Stress) ஆகும். இந்த மனஅழுத்தம் கார்டிசால் மற்றும் பல வேதியியல் பொருள்களைச் சுரக்க வைக்கிறது. இது கொழுப்பை இரத்தக் குழாய்களில் படியச் செய்வதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதநோய் ஏற்படுகின்றன. மேலும் இது இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தி இதய நோய்க்கு இட்டுச் செல்கிறது.

இன்று பள்ளிக்குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் கூறும் சொல் மனஅழுத்தம் (Stress/Tension). இவையே இக்காலக்கட்டத்தில் மாரடைப்புக்கு முதன்மைக் காரணம். எனவே மனஅழுத்தம் குறைய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பின்வரும் பகுதிகளில் விரிவாகப் பார்க்கலாம். இதயத்தைப் பாதிக்கக்கூடிய அடுத்த காரணி இரவில் அதிக நேரம் கண்விழிப்பது மற்றும் குறைந்த நேர உறக்கம். காலம் கடந்து 10 மணிக்கு மேல் உணவருந்திவிட்டு உடனே உறங்குவது இதயத்தையும் மற்ற உடல் உறுப்புகளையும் கெடுக்கக்கூடியது.

சமீபத்தில் 40 வயதில் இருப்பவர்கள் இதய நோய்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள். புகைப்பிடிப்பது இதய நோய்கள் ஏற்பட ஒரு முக்கிய காரணம். அடுத்து, இப்போது பலரும் உட்கார்ந்தே செய்யும் பணிகளில் இருக்கின்றனர். இதனால் உடல் இயங்க வாய்ப்புக் குறைந்துவிடுகிறது. இதுவும் மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகும். கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், அதிக இரத்தக் கொழுப்பின் அளவு, மரபணுக் கோளறுகள், மது மற்றும் புகைப் பழக்கம், போதைப்பொருட்களுக்கு அடிமையாவது, உடல் பருமன். இவை அனைத்துமே மாரடைப்பை வருவிக்கும் மிக முதன்மையான காரணிகளில் சிலவாகும், இவற்றில் மரபணு மாற்றங்களைத் தவிர மற்றவற்றை நம்மால் தவிர்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதயத்தைப் பாதுகாப்பது எப்படி?

"விருந்தும் மருந்தும் மூன்று நாள்" எனும் பழமொழி நம் அனைவரும் அறிந்ததுதான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பலகாரம் என்பது தீபாவளி மற்றும் சிறப்பான சில விழாக்களில்தாம் கிடைக்கும். ஆனால் இப்போதோ, ஆண்டு முழுவதும்எப்போது வேண்டுமானாலும் வேண்டிய பலகாரம் கிடைக்கிறது.

நலவாழ்வு காக்கும் இந்தியப் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் இப்போது பொதுவாகவே குறைந்து விட்டது. மேற்கத்திய உணவுப் பழக்கம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது. சிறுதானியங்களின் மதிப்பை நாம் மறந்துவிட்டோம். பருப்புகளின் பலனைப் புறந்தள்ளிவிட்டோம். காய்கறிகளைச் சமைக்கச் சோம்பல் வந்துவிட்டது. மாறாக, அடிக்கடி உணவகங்களுக்குச் சென்று, எண்ணெய்யில் வறுத்த, பொரித்த, கலோரிச் சத்து மிகுந்த பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகளையும், அசைவ உணவுகளையும் மிகையாக உண்பது வாடிக்கையாகி விட்டது.

ஆயத்த உணவுகளைக் குழந்தைகள், இளம் வயதினர் சாப்பிடுவதால், உடலில் கொழுப்பு அதிகமாகிறது. இதனால் இதய நோய்கள் சிறுவயதிலேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். முடிந்த அளவு இந்த உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. இவற்றை வழக்கமான உணவாகச் சாப்பிடவேகூடாது. நம் பாரம்பரிய அரிசி வகைகள், கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய உணவுகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளும், பழங்களும் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். நன்கு தீட்டப்பட்ட அரிசி, உப்பு, சர்க்கரை போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நண்பர்கள், குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது; அதிகம் சமூக ஊடகம் பயன்படுத்தாமல், அலை பேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது, யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் செய்வது என நம்மை நாமே அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் இரவு வேளையில் குறைந்தது 10 மணி நேரமாவது உணவு மண்டலத்துக்கு ஓய்வு கொடுத்தால்தான், நம் இதயமும், இரத்தக் குழாய்களும் நலமாக இருக்கும். எனவே நாம் அனைவரும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் 30 நிமிட உடற்பயிற்சி தேவை. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இரவில் பணிசெய்பவர்களின் கவனத்திற்கு

இரவில் பணி செய்பவோருக்கு இதயம் தொடர்பான நோய்கள், பகலில் பணி செய்பவர்களை விட அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது! இரவில் பணி செய்பவர்களில் இதயத்துடிப்பு 20 முதல் 25 சதவீதம் சீராக இல்லை என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதே போல், இரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்ற இடர்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, வெளிச்சம் இல்லாத அறையில் 8 மணி நேரம் வரை நன்றாக உறங்க வேண்டும். மேற்கூறிய தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

பெண்களின் கவனத்திற்கு

இதய நலனில், பெண்கள் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வரை ஈஸ்ட்ரோஜன் இயல்பாக சுரக்கும். இதனால், 45 வயது வரை இதய நோய்கள் ஏற்படுவது குறைவாக இருக்கும். ஆனால், மாதவிடாய் நின்றதும், ஆண்களுக்கு இணையாக இதய நோய் வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த வயதில், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இப்படிச் செய்வதால் நம் இதயமும் பாதுகாக்கப்படும் பிறர் இதயங்களிலும் நாம் நீண்ட நாட்கள் வாழவும் முடியும். சிந்தித்துச் செயலாற்றுங்கள்.

Tags:    

Similar News