சிறப்புக் கட்டுரைகள்

கருவை கலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி?

Published On 2025-09-10 14:59 IST   |   Update On 2025-09-10 14:59:00 IST
  • கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் கருவானது 12 வாரத்துக்கு கீழே உள்ளதாக இருக்க வேண்டும்.
  • கருக்கலைப்பின்போது முதல் முக்கியமான பிரச்சினை உடல் ரீதியான பிரச்சினை ஆகும்.

இன்றைய காலகட்டத்தில் திருமணத்துக்கு முன்பே கருத்தரித்தல் மற்றும் கருக்கலைப்பு அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைகள் பெண்களின் வாழ்க்கையில், குறிப்பாக இளம்பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் தரித்தலும், அதை செய்கிற கருக்கலைப்பு முறைகளும், இளம் வயது பெண்களின் இறப்பு, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய பாதிப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே கருக்கலைப்பை எப்படி பாதுகாப்பாக செய்வது? பாதுகாப்பாக கருக்கலைப்பை செய்தாலும் என்னென்ன பிரச்சி னைகள் ஏற்படுகிறது? இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

பெண்களுக்கு கருக்கலைப்பை பாதுகாப்பாக செய்வதற்கு, அதற்கான தகுதி பெற்ற மருத்துவர் இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வதற்கு தகுதி பெற்ற அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக இருக்க வேண்டும். அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். அந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் உடல் நலனை காப்பதற்கான வழிமுறைகள் சரியாக இருக்க வேண்டும்.

கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் கருவானது 12 வாரத்துக்கு கீழே உள்ளதாக இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்யலாம் என்று ஒரு மருத்துவர் உறுதி செய்தால் அந்த கருவை கலைக்க முடியும். கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஒரு முறையான கவுன்சிலிங் பெறவேண்டும். கருக்கலைப்பு செய்யலாம் என்று அவரிடம் முறையாக ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு தான் கருக்கலைப்பு செய்ய முடியும்.

இதுவே கருவில் உள்ள குழந்தைக்கு உடல் பாதிப்பு என்றால், அதற்கான ஒரு சரியான ஸ்கேன் பரிசோதனை அறிக்கை இருக்க வேண்டும். அதற்கு ஒரு முதுநிலை மருத்துவர் சான்றிதழ் வழங்கி இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வதற்கு இதெல்லாம் சில வரைமுறைகள் ஆகும்.

கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு பெண்கள் இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும். இந்த வகையில் இவை எல்லாமே சரியாக இருந்தால் கருக்கலைப்பு என்பது சாத்தியமானது. அதற்கு கணவரின் கையெழுத்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெண்களின் முடிவையே இதில் ஏற்றுக் கொள்ள முடியும்.

கருக்கலைப்பு விஷயத்தில் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்:

என்னிடம் ஆலோசனைக்கு வரும் பெண்கள் முதலில் சில சந்தேகங்களை கேட்பார்கள். டாக்டர் நான் திருமணத்துக்கு முன்பு கருத்தரித்தேன், அதன்பிறகு பெரிய கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் மிகவும் பாதுகாப்பான முறையில் தான் கருக்கலைப்பு செய்தேன். நல்ல மருத்துவமனையில் போய் தான் பார்த்தேன், தகுதியற்ற மருத்துவர்களிடம் போகவில்லை. அப்படிப்பட்ட நிலையில் கருக்கலைப்பு செய்துள்ள எனக்கு பின் விளைவுகள் வருமா,,,? என்பார்கள். இன்றைய பெண்கள் கேட்கிற முதல் கேள்வியே இப்படித்தான் இருக்கும்.

அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான். கருக்கலைப்பு செய்வதால் கண்டிப்பாக பிரச்சினைகள் வரலாம். இந்த பிரச்சினைகள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், எப்போது வேண்டுமானாலும் வரலாம், திருமணம் என்பது இதற்கு தடையே அல்ல. திருமணமாகி இருந்தாலும், திருமணமாகவில்லை என்றாலும், எந்த காலகட்டத்திலும் கருக்கலைப்பு செய்யும்போது, சில பிரச்சினைகள் அதிகமாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தகுதி பெற்ற மருத்துவர் கருக்கலைப்பு செய்தால் கூட பிரச்சினைகள் வருமா என்றால் வரலாம். என்னென்ன பிரச்சினைகள் வரலாம்? முதலில் உடல் ரீதியான பிரச்சினைகள் வரலாம். இரண்டாவதாக, மன ரீதியான பிரச்சினைகள் வரலாம். மூன்றாவது, அவர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். நான்காவதாக, சமுதாய ரீதியாக பிரச்சினைகள் வரலாம்.

எனவே ஒரு தேவையில்லாத கர்ப்பத்தை, திருமணத்துக்கு முன்பே உருவான கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்யும்போது பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.

கருக்கலைப்பின்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:

கருக்கலைப்பின்போது முதல் முக்கியமான பிரச்சினை உடல் ரீதியான பிரச்சினை ஆகும். அவர்களுக்கு உடல் ரீதியாக என்ன பிரச்சினை வரலாம் என்று பார்த்தால், கருக்கலைப்பு செய்யும்போது பல நேரங்களில் ரத்தப்போக்கு அதிகமாகலாம். கர்ப்ப வாயில் தொற்றுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படலாம். கர்ப்பப்பையில் காயங்கள் ஏற்படலாம்.

அதனால் கர்ப்பம் தரிக்காத நிலை உருவாகலாம். கர்ப்பப்பையில் ஓட்டை விழுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பல நேரங்களில் கர்ப்பப்பையில் தொற்றுகளும் ஏற்படலாம். அதனால் அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு பிற்காலத்தில் கருத்தரிக்க முடியாத நிலையும் வரலாம்.

தேர்ச்சி பெற்ற மருத்துவர் கருக்கலைப்பு செய்தாலும் கூட, அல்ட்ரா சவுண்ட் வழிகாட்டுதலில் செய்தாலும் கூட சில நேரங்களில் கர்ப்பப்பை பழுது அடைவது, ரத்தப்போக்கு ஏற்படுவது என்பது போன்ற பிரச்சினைகளும் வரலாம்.

இரண்டாவது மன ரீதியான என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்றால், இவர்களை பாதிக்கின்ற ஒரு முக்கியமான விஷயம் மன அழுத்தம். அதாவது கவலை, தேவையில்லாத மன கஷ்டம், இதனால் குற்ற உணர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. பல நேரங்களில் கருக்கலைப்பு செய்யும்போது, தாய்மைக்கான ஒரு விஷயத்தை, ஏதோ ஒரு காரணத்துக்காக கலைத்தோம் என்கிறபோது, அதனால் ஏற்படுகிற மன அழுத்தமும் பெண்களை பாதிக்கின்ற மன ரீதியான பிரச்சினைகள் ஆகும்.

மூன்றாவதாக, சமுதாய ரீதியாக பிரச்சினைகள் வருகிறது. திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் தரித்து கருக்கலைப்பு செய்வது என்பது சமுதாய ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் ஆகும். அந்த வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அவர்களுடைய நிலை தாழ்ந்து விடுகிறது. இதனால் அவர்கள் சமூகத்தில் பழகுவதே குறைவாகிறது. சமூக ரீதியாக தேவையில்லாத செயல் செய்துவிட்டார் என்ற குற்ற உணர்ச்சியோடு அவர்களை பார்ப்பவர்களும் அதிகம். இந்த மாதிரியான பிரச்சினைகள் சமுதாய ரீதியாக ஏற்படுகிறது.

நான்காவது, இதுபோன்ற பிரச்சினைகளால் அந்த பெண்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படுகிற குழப்பங்களால் அவர்களுடைய வேலைத்திறன் குறைவாகிறது. பல நேரங்களில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தேவையில்லாத பண செலவு ஏற்படுகிறது. உடல் நிலை பாதிப்பினால் நீண்ட நாள் பிரச்சினைகள் நிறைய வரலாம். இவை தவிர பல நேரங்களில் இவர்களுக்கு பிற்காலத்தில் குழந்தையின்மை பாதிப்பும் ஏற்படலாம். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியாக மாறும் நிலையும் வரலாம்.

ஒவ்வொரு பெண்ணும் தேவையில்லாத கர்ப்பம், தேவையில்லாத கருக்கலைப்பு, திருமணத்துக்கு முன்பு உருவாகும் கர்ப்பம் ஆகியவற்றை கண்டிப்பாக தடுக்க முடியும். ஏனென்றால் இதை தடுப்பதற்கு நிறைய முக்கியமான வழிமுறைகள் இருக்கிறது. இன்றைக்கு கருத்தடை முறை என்பது மிகவும் பொதுவாக இருக்கிறது. கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு சட்ட ரீதியாகபாதுகாப்பு இருந்தாலும், அந்த பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கி யத்துக்கு இது பங்கம் விளைவிக்கிறது.

 

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

தேவையில்லாத கர்ப்பம், கருக்கலைப்பை கண்டிப்பாக தடுக்க முடியும்:

இந்த வகையில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், தேவையில்லாத கர்ப்பத்தை தடுக்க முடியும். இன்றைக்கு எத்தனையோ வகையில் கருத்தடை முறைகள் இருக்கிறது. இந்த கருத்தடை முறைகளை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். இதைப்பற்றி ஒரு தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.

தேவையில்லாத உறவுகளால் ஏற்படுகிற கர்ப்பம், அதை கலைப்பதால் ஏற்படுகிற மன உளைச்சல், இதனால் ஏற்படுகிற உடல் ரீதியான பிரச்சினைகள், அதனால் நீண்ட நாட்களாக குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் இவர்களில் நிறைய பேரை நாங்கள் பார்க்கிறோம்.

பெண்களுக்கு நாங்கள் சொல்கின்ற முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தை பேறு என்பது நமது நாட்டை பொறுத்த வரைக்கும் திருமணத்துக்கு பிறகு என்பதுதான். தற்காலத்தில் எத்தனையோ கருத்தடை முறைகள் இருக்கிறது. இவற்றினை தெளிவாக தெரிந்து கொண்டு, உங்களுடைய பாலியல் உறவுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். பல நேரங்களில் தேவையில்லாமல் பாலியல் உறவு கொண்டு, அதனால் வருகிற தேவையில்லாத கர்ப்பத்தை கலைக்க போய் உடல், மன ஆரோக்கியம் எல்லாமே கெட்டுப்போகிறது. நல்ல கருத்தடை முறைகள் நமது நாட்டில் மிகவும் எளிதாக கிடைக்கிறது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வது தவறு தவறு இல்லை என்பது ஒவ்வொருவரின் மனம் சார்ந்த விஷயம். அதேபோல் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் தரிப்பதும் சரியா தவறா என்பது சொல்வதற்கில்லை. ஆனால் உங்களது கர்ப்பத்தை திட்டமிடுவது என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

நீங்கள் முறையாக உங்கள் கருத்தரிப்பை திட்டமிட்டால், கண்டிப்பாக இந்த தேவையில்லாத கர்ப்பமும், கலைக்க வேண்டிய அவசியமும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் வராது. உணர்வு ரீதியான விஷயங்களில் தேவையில்லாமல் உங்களை இழந்து கருத்தரித்து, அதனால் ஏற்படுகிற மன உளைச்சல், நீண்ட நாள் உடல் ரீதியான பாதிப்பு, பிற்காலத்தில் குழந்தையின்மை ஏற்பட்டு அதனால் உருவாகும் குற்ற உணர்வு, அதோடு உங்களுடைய துணையுடன் ஏற்படுகிற பிரச்சினைகள் ஆகிய அனைத்துமே உங்களால் கண்டிப்பாக தடுக்கக்கூடியது தான். எனவே தேவையில்லாமல் கர்ப்பம் அடைந்து, அதை கருக்கலைப்பு செய்து, உங்கள் உடல், மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உடல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இந்த விஷயங்களில் தெளிவாக பொறுப்புடன் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முழுமையாக தடுக்க முடியும்.

Tags:    

Similar News