2025 REWIND: நேபாள் முதல் மெக்சிகோ வரை.. உலக அரசுகளை மிரள வைத்த 'Gen Z' புரட்சி - மீள்பார்வை
- தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர்.
- புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை.
2025, நேபாள வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. பல்லாண்டுகளாக நீடித்த பழைய அரசியல் கட்டமைப்பை 1997 முதல் 2012 இடையில் பிறந்த 'ஜென்-சி' (Gen Z) என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் தங்கள் போராட்டத்தின் மூலம் தகர்த்தெறிந்துள்ளனர்.
ஒரு புரட்சி தொடங்க 2 காரணிகள் உண்டு. ஒன்று நீண்டகால காரணி. மற்றொரு உடனடி காரணி.
நேபாளத்தை அரசியல் மாற்றத்திற்கான விதைகள் 2025 தொடக்கத்திலேயே தூவப்பட்டன.
பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மீது ஊழல் புகார்கள், பொருளாதாரத் மந்த நிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக இளைஞர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
இதேநேரம் அரசியல் தலைவர்களின் மகன்களும் மகள்களும் ஆடம்பர வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரப்பப்பட்டன. தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர். இதுவே நீண்டகால காரணிகள்.
புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை. அந்த வகையில் செப்டம்பர் 4, 2025 அன்று, அரசு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதித்தது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கையே நாடு தழுவிய போராட்டத்திற்கு உடனடி காரணியாக அமைந்தது.
செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நேபாளத்தின் வீதிகள் போர்க்களமாக மாறின.
பாராளுமன்றக் கட்டிடம், உச்ச நீதிமன்றம் மற்றும் பிரதமரின் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டிடங்கள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.
பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் களம் இறக்கப்பட்டது.
இந்தப் போராட்டங்களால் நேபாளத்திற்கு சுமார் 586 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டத்தின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் செப்டம்பர் 9-ஆம் தேதி பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, நாட்டின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.
சுவாரஸ்யமாக, இவரது தேர்வு Discord என்ற சமூக வலைதளம் மூலம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மற்றும் ராணுவம், ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தது.
நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பொதுத்தேர்தல் 2026 மார்ச் 5 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டு நேபாள இளைஞர்கள் தங்களின் வலிமையால் ஒரு ஆட்சியையே கவிழ்க்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தனர்.
வரும் 2026 தேர்தல், நேபாளத்தில் மீண்டும் பழைய அரசியல்வாதிகளின் கைகளுக்குச் செல்லுமா அல்லது புதிய இளம் தலைமுறைத் தலைவர்களை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதேபோல் மற்ற சில நாடுகளிலும் அரசுக்கு எதிராக ஜென் z போராட்டங்கள் வெடித்தன.
மடகாஸ்கர்: அகடோபர் மாதம் மடகாஸ்கரில் கடும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனை எதிர்த்துத் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம், விரைவிலேயே அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான மாபெரும் புரட்சியாக உருவெடுத்தது.
இந்தோனேசியா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான வீட்டு வாடகைப் படிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் இந்தோனேசிய இளைஞர்கள் போராடினர்.
இந்தப் போராட்டத்தின் தீவிரத்தால் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மொராக்கோ: 2030 பிபா கால்பந்து உலகக் கோப்பைக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிய அதே வேளையில், கல்வி மற்றும் சுகாதாரம் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.
'GenZ 212' என்ற ஆன்லைன் குழுவின் மூலம் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
பல்கேரியா: 2026-ஆம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட் ஊழலுக்கு வழிவகுப்பதாகக் கூறி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராடினர்.
பிலிப்பைன்ஸ்: வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடந்த பெரும் ஊழலைக் கண்டித்து பிலிப்பைன்ஸ் இளைஞர்கள் களமிறங்கினர். தவறு செய்த அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அதிபர் மார்க்கோஸ் ஜூனியருக்கு அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
கென்யா: கென்யாவில் வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து தொடங்கிய போராட்டம், 2025 ஜூலை மாதத்தில் போலீஸ் அராஜகத்திற்கு எதிரான போராட்டமாக மாறியது. இளைஞர்கள் கடத்தப்படுவதையும் சட்டவிரோதக் கைதுகளையும் எதிர்த்து அவர்கள் இடைவிடாமல் போராடினர்.
மெக்சிகோ: குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு மற்றும் மேயர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இளைஞர்கள் தேசிய மாளிகைக்குள் அதிரடியாகப் புகுந்து போராடினர்
பெரு: அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் தினா பொலுவார்டே பதவி விலகக் கோரி செப்டம்பரில் போராட்டங்கள் வெடித்தன.
2025-ஆம் ஆண்டில் 'ஜென் Z' இளைஞர்கள் வெறும் சமூக வலைதளங்களில் மட்டும் கருத்துகளைப் பதிவிடாமல், களத்தில் இறங்கி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு புதிய அரசியல் வடிவதற்கான ஆரம்பமாகவே இந்த உலகளாவிய போராட்டங்கள் பார்க்கப்படுகின்றன.